பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கபோதிபுரக்


கார்டு கலர்ச் சேலையா, ரிப்பர் பார்டர் சேலையா, மயில் கழுத்து கலரா, மாதுளம் பழநிறச் சேலையா. ஜவ்வாது இருக்கிறதா, தீர்ந்து விட்டதா என்ற யோசனைதான்.

மாதுளம்பழ நிறச்சேலை கட்டிக்கொண்டால்தான் நன்றாக இருக்கும் என முடிவு செய்தாள். உடனே முகம் மாறிற்று. ஆம்! முதன்முதலில் பரந்தாமனைக் காணும்போது மாதுளம்பழ நிறச்சேலைதான் கட்டிக்கொண்டிருந்தாள் சாரதா!

பழைய நினைவுகள், தோணி ஓட்டையில் நீர் புகுவதுபோல விரைவில் புகுந்தன. தோணி கடலில் அமிழ்வதைப்போல அவள் துக்கத்தில் ஆழ்ந்தாள். தலையணையில் நீர் கண்கள் குளமாயின! அவளது வாசனை திரவியப் பூச்சுவேலை சேறாகிவிட்டது. சாரதா தனது உண்மைக் காதலை நினைத்து உள்ளம் கசிந்தாள். உறக்கமற்றாள்! மறுநாள் காலை முகவாட்டத்துடன் விருந்தாளிகளை வரவேற்றாள்!

சிங்காரவேலுக்கு, அந்த முகவாட்டமே ஒரு புது மோஸ்தர் அழகாகத் தெரிந்தது. கோகிலம், கத்தரிப் பூக்கலர்ச் சேலைதான் சாரதாவுக்கு ஏற்றது என்று யோசனை கூறினாள். விருந்தாளிகள் வந்த ஒருமணி நேரத்திற்குள் சாரதாவிடம் வருஷக்கணக்கில் பழகினவர்கள்போல நடந்துகொண்டனர். ஒரே பேச்சு! சிரிப்பு!! கோகிலத்தின் குட்டிக் கதைகளும் சிங்காரவேலின் ஹாஸ்யமும் ராதாவுக்குப் புதிது! அவை அவளுக்குப் புதியதோர் உலகைக் காட்டிற்று. அதிலும் அந்த மங்கை புகுந்தாள்!

ஒருமுறை வழிதவறிவிடின் பிறகு எவ்வளவோ வளைவுகளில் புகுந்தாகத்தானே வேண்டும்.

அத்தகைய ஒரு வளைவு! சிங்காரவேலர் – கோகிலா பிரவேசம்!