பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கபோதிபுரக்


மாரிக்குப்பத்துக்கு. உச்சி வேளை பூஜைக்குப் போய்ச் சேர்ந்துடலாமே” என்று வேதவல்லி கூறினாள்.

”அதுக்குள்ளே பேஷா போகலாம். அடிச்சி ஓட்டினா அரை மணியிலே போகலாம். எதுவும் அப்படித்தான். அடிச்சி ஓட்டாத மாடும், படிச்சி வழிக்கு வராத பிள்ளையும் எதுக்கு உதவப் போவுது. என் சேதியைக் கேட்டா சிரிசிரின்னு சிரிப்பீங்கோ, நான் படிச்சதும் பிழைச்சதும் அப்படி” என்றான் வண்டி ஓட்டி.

“நீ படிக்கவேயில்லையாப்பா” என்று கேட்டாள் வேதவல்லி. படிச்சேன், ஆறாவது வரையிலே. அதுக்கு மேலே, ஆட்டமெல்லாம் ஆடினேன். இப்போ மாட்டுவண்டி ஓட்டற வேலைதான் கிடைச்சுது. அதுவும் நம்ம சிநேகிதர் ஒருவர் காட்டினார் இந்தப் பிழைப்பையாவாது. உம்! எல்லாம் இப்படித்தான். அந்தச் சினிமாவிலேகூட பாடறாங்களே, ”நாடகமே உலகம், நாளை...’ என்று மெல்லிய குரலிலே, பாடலைப் பாடினான் பரந்தாமன் – அதுதான் அவன் பெயர். நாடகமே உலகத்திலிருந்து... மாயப்பிரபஞ்சத்துக்கு” வந்தான். அதிலிருந்து “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” ஆரம்பித்தான். வீராசாமிபிள்ளை கணைத்தார். “தம்பி பாட்டு பிறகு நடக்கட்டும். ஓட்டு வண்டியை” என்றார். வேதவல்லி, “சாரதா! சாரதா! என்னம்மா மயக்கமா இருக்கா” என்று தன் மகளைக் கேட்டாள்.

கொஞ்ச நேரம் சென்றதும் வண்டிக்குள்ளே நோக்கினான். சாரதா, வேதவல்லியின் தோள்மீது சோர்ந்து படுத்துக்கொண்டிருந்தாள். ஒருமுறை அவளைக் கண்டான், ஓராயிரந் தடவை ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்று பாடலாமா என்று தோன்றிற்று. பரந்தாமன் உள்ளத்தை அந்தப் பாவை கொள்ளைகொண்டாள். கண்கள் மூடித்தான் இருந்தன; ஆனாலும் அதிலும் ஒரு வசீகரம் இருந்தது.