பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

51


“பதறவேண்டாம்”

பெருமூச்சுடன் கருப்பையா நின்றான். உடல் துடிக்க சாரதா நின்றாள். சிரித்துக்கொண்டே சிங்காரவேலன் நின்றான்.

“நான் உல்லாசப் பிரயாணம் செய்வதே, இவ்விதமான அழகு ததும்பும் காட்சிகளைப் போட்டோ எடுப்பதற்குத்தான். இயற்கையின் அழகுகள் எனக்கு மெத்தப் பிரியம். அதனைவிட உணர்ச்சி தரும் உல்லாசக் காட்சிகள் என்றால் நான் விடவே மாட்டேன். மலர் அழகுதான்! போட்டோ எடுத்தாலும் அழகாகத்தான் இருக்கும். ஆனால், அந்த மலரிடம் வண்டு பறந்து சென்று தேன் உண்டு களிக்கும் காட்சி இருக்கிறதே, ஆஹா! நான் என்ன சொல்வேன் அதன் ரம்மியத்தை...” என்று வேலன் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான்.

சிவபூசையில் கரடி புகுந்ததுடன், கவிவேறு பாடினால் எப்படி இருக்கும்!

சாரதா, இந்த ஒரு தோட்டக்காட்சிக்கு மட்டும், நியூ தியேட்டர்சார், பத்தாயிரம் கொடுப்பார்கள். கதாநாயகனைத்தான் மாற்ற வேண்டும். காட்சியில் குற்றமில்லை, நீ மிக அழகுபட நடித்துமுள்ளாய், திகைக்க வேண்டாம். கருப்பையா, முட்டாளுக்கு முத்து கிடைத்ததைப்போல உனக்கு இந்த மங்கை கிடைத்தாள். நீ அதிருஷ்டசாலிதான். ஆனால், நான் உன்னைவிட அதிர்ஷ்டசாலி. உறுமாதே, ஊரார் அறியும்படி இந்தப் படத்தை வெளியிட்டால் உன் கதி என்னாகும். இந்த உல்லாசியின் நிலைமை என்னாகும்!!“

“கப்சிப்!! இங்கே நிற்கவேண்டாம். அதோ யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்கிறது. இன்று இரவு 12 மணிக்கு சாரதா, நீ என் அறைக்கு வரவேண்டும். வேண்டாம் வேண்டாம், நீ வரவேண்டாம் உன்னை நான்