பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கபோதிபுரக்


தனியாகச் சந்திக்கமாட்டேன். கருப்பையா, நீ வா, சில நிபந்தனைகள் கூறுகிறேன். அதன்படி நீங்கள் நடக்கவேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு சிங்கரவேலன் போய்விட்டான்.

சாரதாவும் கருப்பையாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

“விதியே! தலைவிதியே” என்று சாரதா விம்மினாள்.

சாரதா யாரோ வருகிறார்கள். கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினான் கருப்பையா.

“என்னடி மெத்த தளுக்குக் காட்டுகிறாய்”

என்று இனிய குரலில் இசைத்துக்கொண்டே கோகிலம் அங்கு வந்து சேர்ந்தாள்.

இரவு கருப்பையா, சிங்காரவேலன் அறைக்குச் சென்றான், மடியில் கூரான ஈட்டியுடன். சாரதாவின் மானத்தையும் தன் மரியாதையையும் வாழ்வையும் அழிக்கக்கூடிய அந்த வேலனின் உயிரைப் போக்கிவிடுவது என்ற முடிவுடன்.

ஒரு கொலை செய்வதற்கு வேண்டிய அளவு உறுதி அவன் முகஜாடையில் காணப்பட்டது.

வேலன், “வா கருப்பையா, சொன்னபடி வந்துவிட்டாயே” எனத் துளியும் தடுமாற்றமின்றிப் பேசினான்.

கருப்பையாவின் கரம், மடியில் சொருகி வைக்கப்பட்டிருந்த ஈட்டி மீது சென்றது.

வேலனின் சூரிய பார்வை, ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை உணர்த்திற்று. ஆனால், அவன் துளியும் அசையவில்லை. படுக்கைமீது உட்கார்ந்தபடியே ஒரு முடிவுக்கு வந்தான்.

சாமர்த்தியமாகக் கருப்பையாவை ஏமாற்ற வேண்டும்.