பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கபோதிபுரக்


என்ன செய்வேன்” என்று சிந்தை நொந்து கருப்பையாவைக் கேட்பாள். அவன் பலமுறை சாதகமாகவே பதில் கூறினான். சஞ்சலமும் சலிப்பும் அவனுக்கும் ஆத்திரத்தை மூட்டிவிடுமல்லவா? “சரி! என்னைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அவன் படத்தைக் காட்டிவிடட்டும். நான் ஒன்றும் சந்நியாசி அல்ல! உனக்குத்தான் ஆபத்து. ஓட வேண்டியதுதான் நீ வீட்டை விட்டு” என்று மிரட்டினான்.

“படுபாவி! என்னைக் கெடுத்ததுமின்றி, மிரட்டியுமா பார்க்கிறாய். நீ நாசமாய்ப் போக, உன் குடிமுழுக” என்று சாரதா தூற்றினாள். ஆனால், மாதம் முடிகிறது என்றதும், இருவரும் தகராறுகளை விட்டுவிட்டு, பணத்தைச் சேர்த்து அனுப்புவதிலே அக்கறையாக இருப்பார்கள். ஏன்! வயிற்றுலுள்ள குழந்தை வாழ்க்கையில் இழிசொல்லோடு இருக்கக் கூடாதே! அதற்குத்தான்!

“பாவி, படத்தைக் காட்டி, என் முரட்டுக் கணவன் என்னைத் துரத்திவிட்டால், என் குழந்தையின் கதி என்னவாகும்? கண்டவர் ஏசுவார்களே, அதோ அந்தப் பிள்ளை, வீட்டை விட்டு ஓடிவிட்டாளே சாரதா, அவள் பிள்ளை” என்றுதானே தூற்றுவார்கள்.

நான் செய்த குற்றம், என் குழந்தையின் வாழ்க்கையைக் கெடுக்குமே என்று எண்ணும்போது சாரதாவின் நெஞ்சு ‘பகீர்’ என்றாகும். மாதங்கள் ஆறு பறந்தன. மாதம் தவறாது பணம் போய்ச் சேர்ந்தது. ஓர் ஆண் குழந்தையும் சாரதாவுக்குப் பிறந்தது. கருப்பையாவின் கணக்குப் புரட்டுகளும் சாரதாவின் திருட்டுகளும் அதிகரித்தன. இருவருக்கும் இடையே சச்சரவும் அதிகரித்தது. இவர்களின் நல்ல காலத்திற்கு அடையாளமாக, சாரதா புருஷனின் அபின் தின்னும் வழக்கமும் அதிகமாகிக்கொண்டே வந்தது.