பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

51

இக்காட்சிகளை நேரில் கண்ட டிப்டிக் கலெக்டர் ஆஷ் துரை, தனது கைத் துப்பாக்கியால் பொதுமக்களைச் சுட்டார். இதனால் நான்கு பேர் நடுரோட்டிலேயே பிணமானார்கள். மூன்று பேர் படுகாயம் அடைந்தார்கள். இவர்களுள் மூன்று பேர் இந்துக்கள் ஒரு முஸ்லீம் மற்றவர் ஆதி திராவிடர். இறந்தவர்களது பிணங்கள் அவரவர் உறவினர் வரும் வரை ரோட்டிலேயே கிடந்தன.

துப்பாக்கியில் குண்டுள்ள வரை சுட்ட ஆஷ் துரை, குண்டுகள் தீர்ந்ததும் அங்கிருந்து தனது காரிலே ஏறி ஓடினார். அவரைப் பொதுமக்கள் விடாமல் பின்னாலேயே துரத்திக் கொண்டே ஓடினார்கள். ஆஷ்துரை நல்லகாலமாகத் தப்பித்து ஓடிவிட்டார்.

பொதுமக்களும், தேசாபிமானிகளும் போலீஸ்கார்கள் மீது சரமாரியாகக் கற்களை எறிந்து வெள்ளை அதிகாரிகளை விரட்டியபடியே இருந்தார்கள். அதனால், ஓர் இன்ஸ்பெக்டருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

கலெக்டர் விஞ்ச் ரத்தம் சொட்டச் சொட்டப் பலத்த காயமடைந்தார். இந்தக் கலவரம் அன்று ஒரு நாளல்ல, மூன்று நாட்களாகத் தொடர்ந்து இரவு பகலென்று பாராமல் நடந்து கொண்டே இருந்ததைக் கண்ட விஞ்ச், நெல்லை நகர சாதாரண போலீசாரால் அதை அடக்க முடியாது என்பதை உணர்ந்து, சென்னையிலே உள்ள பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு செய்தியைத் தெரிவித்தார்!

உடனே சென்னையிலே உள்ள ஆங்கிலேயே அதிகாரிகள் ஆயுதம் தாங்கிய போலீஸ் படைகளைத் திருநெல்வேலிக்கும், தூத்துக்குடிக்கும், தச்சநல்லூருக்கும் அனுப்பி வைத்தார்கள்.