பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கப்பலோட்டிய தமிழன்

கவியரசர் பாரதியார், சிதம்பரனாருக்காக சாட்சி கூறினார். அவர் மட்டுமன்று மேலும் பலரும் சிதம்பரனாருக்காக சான்று கூறினார்கள். சிலர், சிதம்பரனாருக்காக விரோதமாகவும் சாட்சி சொன்னார்கள்! யார் அவர்கள் தெரியுமா? போலீஸ் அதிகாரிகளும், வெள்ளைக்காரர் கப்பல் நிறுவன ஆதிகாரிகளுமே அவர்கள்.

வழக்குத் தீர்ப்பு ஜூலை மாதம் 7-ஆம் தேதியன்று கூறப்பட்டது என்ன தீர்ப்பு தெரியுமா? சிதம்பரனாருக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனை! அரசுக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக இருபது வருடம் சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்காக இருபது ஆண்டு தண்டனையாம் சுப்பிரமணிய சிவா அரசு விரோதி என்று பத்தாண்டுகள் தீவாந்தரத் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்புக் கூறியவர் வெள்ளைக்கார நீதிபதியான பின்ஹே என்பவராவார். “சிதம்பரம் பிள்ளை பெரிய ராஜத்துரோகி. அவர் எலும்புக் கூடும் ராஜ விசுவாசத்திற்கு விரோதமானது. சுப்பிரமணிய சிவா, சிதம்பரம் பிள்ளையின் கையிலகப்பட்ட ஒரு கோல். திருநெல்வேலி கலவரத்திற்குக் காரணம் இந்த இரண்டு பேர்கள்தான். பிள்ளையின் மேடைச் சொற்பொழிவு முழக்கத்தையும்,பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும், புரட்சி ஓங்கும்” என்று பின்ஹே தீர்ப்பு அளித்தார்.

கொடுமையான இந்தத் தீர்ப்பைக் கேட்ட தேசபக்த சிங்கங்களான சிதம்பரனாரும், சிவாவும் அமைதியும், அடக்கமும் கொண்ட சிங்கங்களைப் போல இருந்தார்களே ஒழிய சிலிர்த்தெழவில்லை. மனித நேயத்துடனும்,