பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{02 கம்பன் எடுத்த முத்துக்கள் தூயவர் துயர்துடைப்பும் பின்னிப் பிணைந்துள்ளன. தீயவர் அழிவில்தான் தூயவர் துயர் துடைப்பு இணைந்துள்ளது. கரன், துரடணன் முதலியோரில் தொடங்கி இராவணன் வரை அழிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அவதார நோக்கம் முழுமையாக நிறைவெய்தும். - இந்த அரக்கர்கள் தீயவர்கள் என்பது உலகறிந்த உண்மை. தீயரே எனினும், மாதவங்கள் செய்து எண்ணரிய வரங்களைப் பெற்றுள்ளவர்கள். புலனடக்கம் செய்து மாபெரும் தவத்தை மேற்கொண்டு அளவற்ற வரங்களைப் பெற்றார்கள் என்றால், இவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். காட்டிலுள்ள முனிவருக்கும் இருடிகட்கும் காரணமின்றி இவர்கள் தீங்கிழைத்தனர் என்பதும் உண்மை தான். வர பலம் பெற்ற இவர்கள் ஏன் முனிவர் முதலாயி னோர்க்குத் தீங்கிழைக்க வேண்டும்? இவ்வினா நியாயமானதே யாகும். தேவர்கட்கும் அசுரர்கட்கும் பரம்பரையாகப் பகைமை உண்டு. முனிவர்கள் தாம் மேற்கொண்ட வேள்விகளை முடித்துத் தேவர்களாக ஆகப்போகிறார்கள். எனவே, அசுரர்களின் உறவினராகிய அரக்கர்கள் இம் முனிவர்களையும் அவர்கள் மேற்கொண்டுள்ள வேள்விகளையும் அழிக்க முயல்வதில் வியப்பு ஒன்றுமில்லை. பெருந்தவங்கள் செய்து சாப, அனுக்கிரக ஆற்றலைப் பெற்றுள்ள இம்முனிவர்கள் தம் ஆற்றலால் இவ் அரக்கர்களை ஏன் அழிக்கவில்லை? இவ்வினாவிற்குச் சிறந்த முறையில் விடை கூறியவர் வள்ளுவப் பெருந்தகையாவர். "உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு” (குறள் - 261) இந்த இரண்டு பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்கள் முனியுங்கவர்கள். ஆதலால் தமக்குத் தீங்கு இழைத்தவர்களைப் பொறுத்துக்கொண்டு, எதிர்த்து ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டனர். அதன் மறுதலையாக இறைவனை வேண்டி, அவன் கீழிறங்கி வந்து அரக்கருடன் போர் செய்யவேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது? இவ்வினாவிற்கு விடை காண்பது சற்றுக் கடினம்தான். என்றாலும், சில அடிப்படைகளை நினைவிற்குக் கொண்டுவருவதில் தவறில்லை.