பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கம்பன் எடுத்த முத்துக்கள் இராகவனைக் கண்டபோது தன் எலும்பு உருகுவதாகவும் காதல் மீதுாருவதாகவும் கூறியதுடனல்லாமல், இராகவனைப் பற்றித் தன் மனத்தில் தோன்றிய எண்ணம் உறுதிப்படும் வகையில் இராகவனுடைய தடக்கையில் சங்கு சக்கரக் குறி உள என்றும் கண்டவன் அனுமன் ஆவான். அப்படியிருந்தும் மராமரத்தில் அம்பைச் செலுத்தி இராகவனுடைய ஆற்றலை அறியலாம் என்று சுக்கிரீவனிடம் அனுமன் ஏன் கூற வேண்டும்? இராகவனுடைய ஆற்றலில் அனுமனுக்கே ஐயம் வந்துவிட்டதா என்ற வினாத் தோன்றினால் அது நியாய மானதே யாகும். இந்த நிலையில் யாருக்காக எப்பொழுது எந்த நிலையில் அனுமன் இந்த உத்தியைக் கூறினான் என்பதை ஆராய வேண்டும். அவனுடைய தலைவனாகிய சுக்கிரிவன் ஒரு சந்தேகப் பேர்வழி. எவ்வளவு கூறினாலும் சான்றுகள் எடுத்துக்காட்டினாலும், அவனது அடிமனத்தின் சந்தேகம் போவது கடினம். "வேறுஉள குழுவையெல்லாம் மானுடம் வென்றதன்றே” (3804) என்று கூறினாலும் வாலியினிடம் உதைபட்டவன் ஆதலாலும் எதிரே நிற்பவர் பலத்தில் பாதியை வாலி பெற்றுவிடுவான் ஆதலாலும் இராமன் வாலியை வெல்லமுடியுமா என்ற ஐயம் அவன் அடிமனத்தில் இருந்ததில் வியப்பில்லை. அனுமன் பரம் பொருளின் இலக்கணத்தை, ஆற்றலை அறிந்தவன்; ஆதலால் அனுமன் ஐயம் கொள்ளவில்லை. ஆனால், இவை இரண்டையும் அறியாத காரணத்தால் சுக்கிரீவன் ஐயம் கொண்டது நியாயமானதே ஆகும். இராமனின் ஆற்றலைக் காட்சிப் பிரமாணமாகக் கண்டாலொழியச் சுக்கிரீவன் நம்புவது கடினம். அதை நம்பாதவரையில் வாலியுடன் போருக்குச் செல்வதும் இயலாத காரியம். சுக்கிரீவனிடம் வாலி போரிட்டா லொழிய இராமன் வாலியைக் கொல்வதற்கு இயலாது. எனவே, நுண்மாண் நுழைபுல மிக்க அனுமன், சுக்கிரீவன் மனத்தில் ஒரு நம்பிக்கையை, அண்ணனிடம் போர்.செய்யும் துணிவை வரவழைக்க இந்த உபாயத்தைக் கூறுகிறான். மரா மரத்தில் அம்பு எய்து துளைப்பது, இராமனுக்கு எளிய செயல் என்பதை அனுமன் அறிவான். அதனை நேரில் கண்டாலொழியச் சுக்கிரீவன் நம்பமாட்டான்.