பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கம்பன் எடுத்த முத்துக்கள் செல்வார்கள் என்று அனுமன் கருதியது நியாயமானதே ஆகும். அவன் நினைத்தது நடப்பதற்கு அயன் படைக்குக் கட்டுப்படுதல் அவசியமாகும். இராவணனைச் சந்திப்பது தான் நோக்கம் என்றால், கிங்கரர்கள், சம்புமாலி, பஞ்ச சேனாபதிகள், அக்ககுமாரன் என்பவர்களில் யாரோ ஒருவரிடம் கட்டுண்டு இராவணனிடம் சென்றிருக்கலாமே என்ற வினாத் தோன்றினால் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், வீரத்தின் முழு வடிவான அனுமன் மேலே சொன்ன ஐவருள் யாரோ ஒருவரின் கட்டுக்கடங்கிச் செல்வது அவனுடைய பெருமைக்கு உகந்தது ஆகாது. குட்டுப்பட வேண்டுமென்று அனுமன் தனக்குத் தானே முடிவு செய்துகொண்டான். அது இந்திரசித்துப் போன்ற மோதிரக் கையால் இருக்கவேண்டு மென்று நினைத்ததில் தவறில்லை. மூவரில் ஒருவருக்கு ஈடானவன் என்று இந்திரசித்தனே இவனைக் குறிக்கின்றா னாதலால், தன் வல்லமையை நன்குணர்ந்தவ னாகிய இந்திரசித்தனிடம் கட்டுப்படுவதே சிறந்ததாகும் என அனுமன் கருதினான். முன்னர் வந்த கிங்கரர் முதல் அக்ககுமாரன் வரை வந்தவர்கள் அனுமனின் ஆற்றலை உணராமல், வந்தது ஒர் குரங்கு' என்ற எள்ளல் மனப்பான்மையோடு வந்தனர். எனவே, பகையைக் குறைத்து மதிப்பிட்டால் என்ன நேரும் என்பதை அனுமன் செய்து காட்டினான். இந்நிலையில் அனுமன் அயன் படைக்குக் கட்டுப்பட்டான் என்றாலும், இந்திரசித்து அவனைக் குறைத்து மதிப்பிடவில்லை; இராவணனிடம் கொண்டு சேர்த்தான். இதுவரிை பாசப்படலம் கூறுவதைக் கண்டோம். சுந்தர காண்டத்தில் பன்னிரண்டாவது பகுதி பிணி வீட்டு படலம் ஆகும். இந்திரசித்தன் ஏவிய அயன் படையால் கட்டுண்ட அனுமன், தானே விடுவித்துக்கொள்ள விரும்பாமல் இருந்தபொழுது அப்படையை ஏவிய இந்திரசித்தனே விடுவித்தான். ஆனால், ஏனைய அரக்கர்கள் பெரும் கயிற்றால் அனுமனைக் கட்ட ஒரே விநாடியில் அக்கட்டைத் தகர்த்து எறிந்துவிட்டான். இதைக் கண்ட இந்திரசித்தனுக்குப் புதிய சிந்தனை தோன்றலாயிற்று.