பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் ● 21 பற்றிய விளக்கத்தின் தொடக்கத்திலேயே பேரா. அ.ச.ஞா. இந்தச் சிக்கலை எழுப்பி விடை கூறுகிறார். "இராமனுடைய சிறப்பையும் பிராட்டியின் சிறப்பையும் கூறவந்த கம்ப நாடன் காப்பியத்தில் உள்ள 10368 பாடல்களில் போருக்கென்று 4818 பாடல்கள் பாடுவது தேவையா, பொருத்தமா." தமிழக வரலாற்றுச் சூழலை எடுத்துக்காட்டி விளக்கிப் பேராசிரியர் தரும் விடை ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. வான்மீகத்திலும் யுத்த காண்டம் மிக விரிவாகவும் பெரிதாகவும் இருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. . - நால்வகைப் படைகள் கொண்டு போர் வெற்றி பல பெறுவது உண்மை வெற்றியாகாது அறநெறியையே முதலாகவும் முடிவாகவும் கொள்வதே உண்மையில் ஒர் அரசின் வெற்றியாகும். இக் கருத்தினைப் புறநானூறு, திருக்குறள் செய்திகள் கொண்டு அறம் தலை நிறுத்த வந்த பெருமானின் போர்த் திறத்தையும் அறத் திறத்தையும் ஆசிரியர், யுத்த காண்ட விளக்கத்தில் தெளிவுறுத்துகிறார். அமைப்பியல், நோக்கிலே மேலும் சிந்தனைக்கு யுத்த காண்டம் உரியதாக இருக்கிறது என எண்ண வேண்டியுள்ளது. பாத்திர விளக்கம் - பாத்திரங்களின் செயல்பாட்டைப்பொறுத்தே காப்பியக் கதையின் போக்கும் வெற்றியும் அமையும். தத்துவச் செறிவு, சமய நாட்டம் முதலான விழுப்பொருள்களும் சந்த நயம், சொல்லாட்சி முதலான கூறுகளும் மட்டுமே காப்பியத்துக்கு வெற்றி தந்துவிடுவதில்லை. கதை மாந்தர்களைக் கவிஞன் எப்படிப் படைத்து நிறுத்துகிறான் என்பதே காப்பிய வெற்றிக்குக் கட்டளைக் கல்லாக அமைகின்றது. காப்பிய நாயகன் முதல் பிராட்டி உட்பட கைகேயி, தசரதன், பரதன், இலக்குவன், வாலி, மாருதி, சுக்கிரீவன், வீடணன், இந்திரசித்து, இராவணன் ஆகிய பாத்திரங்களின்