பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 கம்பன் எடுத்த முத்துக்கள் முப்பத்தொன்பது படலங்களில் ஒரு படலம் நீங்கலாக ஏனைய அனைத்துப் படலங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதும், பொருத்தமுடையதுமாக அமைந்துள்ளன. ஆனால், யுத்த காண்டத்தோடு, ஏன் இராம கதையோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத இரணியன் கதை, இரணியன் வதைப் படலம் என்ற பெயரோடு மந்திரப் படலத்தை அடுத்துக் காணப்படுகிறது. காப்பியக் கட்டுக்கோப்பும், அதன் உறுப்புக்களும், அந்த உறுப்புக்கள் ஒன்றோடொன்று பொருந்தும் முறையும்பற்றி ஆய்ந்து எழுதிய தமிழகத்தின் முதல் திறனாய்வாளராகிய வ.வே.சு.ஐயர் கூட இப்படலம் காப்பியத்தோடு தொடர்பின்றி தனித்து நிற்பதைச் சுட்டுகிறார். அப்படியானால், உலகில் மிகச் சிறந்த காப்பியப் புலவனாகிய கம்பனுக்கு இப்படலத்தின் பொருந்தாமை தெரியாமலா இருந்திருக்கும்? தெரிந்திருந்தும் இப்படலத்தை இங்கே வைத்துள்ளான் என்றால், அதற்குரிய காரணத்தை ஆய்வது நலம் பயக்கும். - இப்படலம் அமைந்துள்ள இடம் பற்றி முதலில் காணவேண்டும். இராவணன் மந்திர ஆலோசனை சபையில் மிக முக்கியமான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. பலர் அக்கூட்டத்தில் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் எனப் பேசுகின்றனர். கும்பகர்ணன் இராவணனை இடித்துக் கூறும் அறவுரைகளைத் தந்ததோடு விட்டுவிட்டான். இறுதியாக இராவணன் கருத்துக்கு ஒரளவு இசைந்தும் விட்டான். வீடணன், இராவணன் தவற்றைச் சுட்டிக்காட்டிப் போர் செய்தால், வெற்றி கிட்டாது என்பதையும், இராவணன் அழிவு உறுதி என்பதையும் எடுத்துக்காட்டினான். இராவணன் கோபம் எல்லை கடந்த நிலையில் வீடணன் இரணியன் கதை சொல்வதாகக் காப்பியம் அமைந்துள்ளது. தன்னை மறந்த கோபத்தில் இருக்கும் ஒருவனிடம் 176 பாடல்களைக் கூறுவதாகப் பாடுவது முற்றிலும் பொருத்தமற்ற தாகும். அப்படியும் இரணியன் கதையை விரிவாகக் கூறிவிடுவதால்மட்டும் இராவணன் மனம் திருந்திவிடுவான் என்று எதிர்பார்ப்பதும் பொருத்தமற்ற தாகும். வீடணன் மூன்று சாபங்களை எடுத்துக்காட்டி, இராவணன் அழிவு.