பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3f4 - கம்பன் எடுத்த முத்துக்கள் தன் ஆற்றலைக் கொண்டு இந்திரசித்தனைக் கொன்றிருப்பின், இலக்குவன் பெருமைப்படவும், ஒரளவு கர்வம் கொள்ளவும் அங்கே இடமிருந்திருக்கும். இறைவன் பெயரைப் பயன்படுத்தி, சாதாரண அம்பைப் போட்டு, தன் காரியத்தை முடிக்கும் இலக்குவன் வெறும் கருவிமாத்திரையாக இருக்கின்றானே தவிர, அவனுக்கு என்று தனித்துவம் எதுவும் இல்லை. அதனால்தான் போலும் அவனைக் கட்டித்தழுவிய இராமன், ஆடவர் திலக! நின்னால் அன்று என்று கூறுகிறான் போலும். இராமன் இந்திரசித்தனுடன் நேரே பொருதாவிட்டாலும் அவன் பெயரில் ஆணையிட்டு எய்த அம்பே இந்திரசித்தனைக் கொன்றது. ஆதலால், கும்பனையும், இராவணனையும் போல, இந்திரசித்தனும் இராமன் கையாலேயே மடிந்தான் என்று நினைக்க இடமுண்டு. இம்மூவரில் கும்பனும், இந்திரசித்தனும் பிழை ஏதும் செய்யாதவர்கள். ஏனைய எல்லா வகைகளிலும் - தவம் உட்பட இராவணனுக்குச் சமமானவர்கள். எனவே, பரம் பொருள், மானிடச் சட்டை தாங்கி இவ்வுலகிடை வந்து, தானே போரிட்டுக் கொல்லவேண்டிய சிறப்பைப் பெற்றனர். இராமானுஜன் ஆகிய இலக்குவன், நடந்துகொண்டதும் சரியானதே ஆகும். தனக்கென்று இறைவன் கொடுத்துள்ள ஆற்றலைப் பயன்படுத்தி இந்திரசித்தனைக் கொல்ல முயன்றான, அது முடியாது என்று உறுதியானவுடன் தான் இறைவனைத் துணைக்கு அழைக்கின்றான். இலக்குவன், அவனுடைய தவப்பலன், அவன் ஆற்றல், தெய்வப்படைகள் ஆகிய அனைத்தும் செய்ய முடியாத ஒரு செயலை, இறைவன் பெயரோடு சேர்ந்த ஒரு பிறைமுக வாளி செய்துமுடிக்கின்றது. இறைவனுடைய நாம மகிமை, சாம்பவானுடைய சிறகுகளை வளரச் செய்கிறது; அனுமனைக் கடல் கடக்க வைக்கிறது; ஒரு சாதாரண அம்பு இந்திரசித்தன் தலையைக் கொய்கிறது. 6ம் நூற்றாண்டுமுதல் 8ம் நூற்றாண்டுவரை, ஆழ்வார்கள் பக்தி இயக்கத்தை வளர்த்து, இறைவன் நாம மகிமையை எடுத்துக் கூறினர். 9ம் நூற்றாண்டில் தோன்றிய கம்பநாடன், இக்கருத்துக்கு அரண் செய்வதுபோல இந்த மூன்று இடங்களிலும் நாம மகிமையை வெளிப்படுத்துகிறான்.