பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 கம்பன் எடுத்த முத்துக்கள் வடிவான குகனால் சான்றிதழ் தரப்பெற்றவன் பரதன் என்றாலும் தலைவன் பணி தலைநின்றவனாய் பதினான்கு ஆண்டுகள் ஆட்சி புரிவது தன் கடமை என்று அறிந்தவுடன் விருப்பு, வெறுப்பற்ற சமநிலையில் நின்று ஆட்சி புரிந்தவன் ஆதலால், அன்போடு கூடிய கடமை உணர்ச்சிக்கு பரதன் எடுத்துக்காட்டாவான். எனவே அவன் குடை கவிக்கிறான் என்றால், இராமராஜ்ஜியம் தொண்டு என்ற அஸ்திவாரத்தில் மேலும் விருப்பு வெறுப்பற்ற கடமை என்ற குடையின் கீழும் அமைந்திருத்தலை கவிஞன் உருவகமாகப் பேசுகிறான். இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக அன்போடு கலந்த தொண்டின் வடிவமாகிய இலக்குவன் ஒருபுறம் கவரி வீசுகிறான். இராமகாதை முழுவதிலும் ஒரே ஒரு பாட்டில் தோன்றிமறையும் அன்பின் வடிவான சத்ருக்கனன் மற்றொரு பக்கம் கவரி வீசுகிறான். எனவே இராமன் என்ற அறத்தின் மூர்த்தி மேலும், கீழும், பக்கங்களிலும் அன்பு, கடமை, தொண்டு என்பவற்றால் சூழப்பட்டுள்ள ஓர் உருவகத்தை இந்த ஒரு பாடலில் கவிஞன் தந்துவிடுகிறான். காந்தி அடிகள் கூறிய இராமராஜ்ஜியத்திற்குக் கம்பனை விடச் சிறந்த விளக்கம் தந்தவர் வேறுயாரும் இலர். அங்கதன் உடைவாள் ஏந்த' என்ற தொடர் மிக நுட்பமானதாகும். பகை என்று கருதப்பெற்று கொல்லப்பட்டவனாகிய வாலியின் மகன் அங்கதன் ஆவான். அரசனுக்குரிய அதிகாரச் சின்னமாகிய உடைவாள் பகைவனின் மகன் கையில் சென்றது என்றால், அதுவும் விரும்பித் தரப்பெற்றது என்றால் இராமன் ஆட்சியில் வாளுக்கு வேலையில்லை என்ற கருத்தை சொல்லாமல் சொல்கிறான் கவிஞன். உடைவாள் பிடிக்க என்று சொல்லாமல், உடைவாள் ஏந்த என்று கூறியதால் வாளைப் பயன்படுத்தும் நாட்கள் ஒழிந்து விட்டன. அது அலங்காரப் பொருளாக ஏந்தப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கவே ஏந்த' என்ற சொல்லை பயன்படுத்துகிறான் கவிஞன். இந்த ஒரு பாடலில் கம்பன் கண்ட இராம காதையின் முழுச் சிறப்பும் இடம் பெறுவதைக் காணலாம். இந்நிகழ்ச்சியை அடுத்து இராகவன் பரதனுக்கு இளவரசு பட்டம் சூட்டிப் பொறுப்பு முழுவதையும் அவனிடம்