பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 47 பெரியாழ்வார். தமிழுலகத்தில் பிள்ளைத் தமிழ் தோன்றுவதற்கு வித்திட்டவர் என்பதை மறக்க முடியாது. கண்ணனைக் குழந்தையாக்கி அவர் பாடுகின்ற பாடல்கள் ஒருமுறை கற்றாரையும் உலுப்பிவிடக் கூடிய அளவு அற்புதமான உணர்ச்சி நிரம்பியவை. அவற்றை நன்கு படித்து மகிழ்ந்திருக்கக் கூடிய கம்பன் அதைப் பயன்படுத்தி இராகவனுக்கு குழந்தைப் பருவப் பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கலாம், பாடாமல் விட்டுவிட்டான் என்பதை அறிய முடிகிறது. பிறந்தான், வளர்ந்தான், வசிட்டனிடத்திலே கல்வி கற்றான். அப்படிக் கல்வி கற்கும்போதே அவன் மேட்டுக்குடி மகனாக - அரச மகனாக வாழவில்லை என்பதையும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளவனாக வாழ்ந்தான் என்பதையும் ஒரு பாடலில் வைத்துக் காட்டுகிறான். தெருவில் வருகின்றவர்களையெல்லாம் சந்தித்து, - எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன் முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா 'எது வினை இடர் இலை இனிது நும் மனையும் மதி தரு குமரரும் வலியர்கொல் எனவே - (31) 'உசாவுவான். இப் பாடலில் பொதுமக்களோடு எப்படி இரண்டறக் கலந்து பழகுகிறான் என்பதைக் கவிச்சக்கரவர்த்தி வைத்துக் காட்டுவது நினைந்து பார்ப்பதற்கு உரியதாகும். வால்மீகியின் பால காண்டம் மூன்றாவது சருக்கத்தின் 33வது பாடல் இராமன், சாதாரண மக்களிடம் வலியச் சென்று குசலம் விசாரித்தான் என்று பேசுகிறது. இராமாயண தனி சுலோகி என்ற பெயரில் வால்மீகியின் சிறந்த பாடல்களுக்கு வியாக்கியானம் எழுதிய பெரியவாச்சான் பிள்ளை, அரச குமாரன் எளிய மக்களிடம் சென்று பேசியதால் அவர்களுடைய மனத்தில் அவனுடைய அன்பு பாய்ந்தது. எதுபோல என்றால், வறண்டு பிளந்து கிடக்கின்ற நிலப்பரப்பில் ஒரு பாட்டம் மழை பெய்தாற்போல