பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலங்கை, கிட்கிந்தை முதலிய நகரங்கள், நாடுகளின் வளர்ச்சி, அம்மக்களின் செல்வ வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி, வேறுபட்ட சமுதாயங்கள், சமுதாய ஒழுக்கங்கள், அரசியல் நுட்பங்கள், போர் முறைகள், அறநெறி, விதி வலியின் செயல்பாடுகள் முதலிய பல விவரங்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றியும் விரிவாக நாம் காண முடிகிறது.

கம்பனுடைய மகாகாவியத்தை ஒரு சமுதாயக் கண்ணோட்டத்திலும் படித்தறிய வேண்டும் என்னும் நோக்கத்துடன் இந்த நூல் மூலம் ஒரு சிறு முயற்சி செய்யப் பட்டுள்ளது. கம்பனுடைய கடவுள் கொள்கை, சமயக்கொள்கை, சகோதரத்துவம் சகோதர உணர்வு, உறவு, மானிடத்தின் பெருமை, அயோத்தி, கிட்கிந்தை, இலங்கை ஆகிய நகரங்களின் அரசியல் முறைகள், இராமனின் போர் கால அரசியல் வியூகம், உத்திகள், கம்பனுடைய தமிழ் மொழிப்பற்று முதலியவை பற்றிக் கம்பனுடைய பலவேறு கருத்துக்களும் இந்நூலில் படித்து அறிய முயற்சிக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் படித்தலும் படித்தறிதலும் முழுமையானது என்று கூற முடியாது. இது ஒரு சிறு துளியேயாகும். வெறும் இம்மித் துளியேயாகும். கம்பனுடைய மகாகாவியம் ஒரு பெருங்கடல். அதில் படிக்க வேண்டிய விவரங்கள் ஏராளம், ஏராளம். இன்னும் விதிவலி, அறன்வலி, கல்வி, ஒழுக்கம், அறநெறி, கற்பின் சிறப்பு, மங்கையர் மாண்பு, மனையின் மாட்சி, பெருங்காதல் முதலிய பல பிரச்சனைகளைப் பற்றியும் கம்பன் பல இடங்களிலும் விரிவு படக் கூறுகிறார்.

கம்பன் ஒரு கல்விக் கடல். அக்கம்பனே இராமாவதாரக் கதையைத் தான் எழுதியது பற்றிப் பாற்கடலைப் பூனை நக்கிக் குடிப்பதற்கு முயற்சிப்பதைப் போல நான் இராமன் கதையை எழுத முயன்றுள்ளேன் என்று குறிப்பிடுகிறார். அப்படியிருக்க நமது முயற்சி ஒரு சிறு துரும்பேயாகும்.

கற்றறிந்த தமிழ் புலமையோடு இந்த நூல் எழுதப் பட்டுள்ளது என்று கூற முடியாது. இது ஒரு சாதாரண மனிதனின் அனுபவ பூர்வமான ஒரு சாதாரண முயற்சியேயாகும். யாரேனும் என்னை இந்த நூலை ஏன் எழுதினிர்கள் என்று கேட்டால் கம்பனைப் பற்றிப்{{{pagenum}}}