பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்



அனுமன் இராமனை முதன் முதலில் சந்தித்த போதே, அனுமனின் சொல்லாற்றலை இராமன் வியந்து;

"இல்லாத உலகத்து எங்கும்
            இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக்
            கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே!
            யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில்ஆர் தோள் இளைய வீர!
            விரிஞ்சனோ? விடைவ லானோ?”

 
(கம்பன்-3768)

என்று இலக்குவனிடம் பேசுகின்றான்.

இத்தகைய அனுமனின் தூது இலக்கியப் புகழ் மிக்க தூது. தூதுவர்கள் அடக்கம், அமைதியுடையவர்களாகவும், அதே போழ்து துணிவும் உறுதியுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். எதிரிக்கு எந்தச் சூழ்நிலையிலும் எரிச்சலும், கோபமும் உண்டாகும்படி நடந்து கொள்ளக் கூடாது. எதிரிகள் எரிச்சலுண்டாகும்படிப் பேசினாலும் செயல்பட்டாலும் தூது போனவர் எரிச்சலடையக் கூடாது. தூதின் முடிவு காரிய சாதகமாகவும் போரைத் தவிர்ப்பதுமாகவும் அமையும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில், எதிர் முனையின் பிடிவாதத்தாலும் அடாவடித்தனத்தாலும் சமாதானம் உருவாகாவிடின் அவசியமாயின், இறுதியில் போரை வரவேற்கவும் தூதன் அஞ்சக் கூடாது.

இலங்கைப் பேரரசன் இராவணன் அவையில் அனுமன் இராமனின் சிறந்த தூதுவனாகப் பணியாற்றியமையை உலகம் உள்ளளவும் பாராட்டும். அனுமன் இராவணனைப் பார்த்த நிலையில் அவனைக் கொன்றொழிக்க எண்ணுகிறான். ஆயினும், தலைவன் ஆணை இல்லையே என்று கொலை செய்வதைத் தவிர்த்துக் கொள்கிறான். அனுமன்,