பக்கம்:கம்பன் கலை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 167 அளிக்கின்றது. எனவே, இராமனுடைய கண்களின் மலர்ந்த, மகிழ்ச்சியுடன் கூடிய நிலை நினைவுக்கு வருகிறது. சிற்சில சந்தர்ப்பங்களில் இவ்வளவு சிறப்புடைய உவமையும் இதனோடு தொடர்புடைய உருவகமும் கவிஞனின் மனத்தில் எண்ணிய கருத்தை முழுவதும் வெளிப்படுத்த முடியாமற் போவதும் உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில், மொழிக்கு இயற்கையாக உள்ள கருத்தை வெளிப்படுத்த முடியாத குறைபாட்டை எண்ணிக் கவிஞனே வருந்துகின்றான். அவனால் செய்யத்தக்கது ஒன்றுமில்லை என்று கண்டபொழுது கையை விரிப்பது தவிர அவன் செய்யத்தக்கது ஒன்றும் இல்லை. கவிச் சக்கரவர்த்தி கம்பநாடன் கூட இதற்கு இலக்காகி விடுகிறான். இலக்குவனாம் தம்பியோடும், மிதிலைப் பொன்னாகிய சானகியோடும் இராமன் காட்டில் நடந்து செல்கின்ற காட்சியை வருணிக்கத் தொடங்குகின்றான் கவிஞன். மாலை நேர வெய்யில் இராமனுடைய நீல மேனியில் பட்டுத் தெரிக்கின்ற அழகைச் சொல்ல வந்த கவிஞன், அந்த அழகைக் கற்பனையில் கண்டு அதனுடன் அமையாமல் தான் கண்ட காட்சிக்கு வடிவு கொடுக்கவும் விரும்புகிறான். மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ என்று தொடங்கிய கவிஞன், இத்தனை சொற்களைப் பயன்படுத்தியுங் கூட அந்த அழகை முழுமையும் தான் கூறமுடியவில்லை என்ற உண்மையை உணர்கின்றான். வேறு எத்தனை சொற்களைப் பயன்படுத்திடினும் அந்த அழகை முழுவதும் வருணிக்க முடியாது. அதாவது சொல்லால் வருணிக்க முடியாது என்ற பேருண்மையை உணர்கின்ற கவிஞன், "ஐயோ! இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்" என்று கூறுமுகத்தான் தன்னுடைய ஆற்றாமையைத் தெரிவிக்கின்றான். இரக்கக் குறிப்பை உணர்த்தும் ஐயோ என்ற சொல் நான்காவது அடியின் முதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/178&oldid=770693" இலிருந்து மீள்விக்கப்பட்டது