பக்கம்:கம்பன் கலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூரிய தேர்வலான் 49 செய்ததைப் பலரும் செய்து விட முடியும். ஆனால், இதனை அடுத்த நிலையைச் சமாளிப்பது எளிதானதன்று. அமைச்சர் அவையின் சார்பாகச் சுமந்திரன் ஏதேனும் கூறித்தான். ஆகவேண்டும். ஆனால், என்ன கூறுவது? தசரதனுடைய முடிவு சிறந்தது என்று கூறிவிடலாமா? வசிட்டன் அவ்வாறுதான் கூறினான். உலகப்பற்றிலிருந்து விடுபட்ட அம் முனிவன் எது வேண்டுமாயினும் கூறலாம். தன் சொற்களால் யார் வருத்தமடைகிறார்கள், யார் இன்புறுவார்கள் என்பவை பற்றி அவன் கவலைப்படமாட்டான். ஆனால், அமைச்சன் தானும் அவ்வாறு கூறிவிட முடியுமா? தசரதன் கூற்றை விரும்பி ஏற்றுக்கொண்டு தன் மகிழ்ச்சியை அறிவித்ததாக வைத்துக்கொள்வோம். அதனால் தசரதன் மகிழ்ச்சி அடைவான் என்பது என்ன உறுதி தன்னுடைய அமைச்சர்கள் தன்னைக்காட்டிலும் தன்னுடைய மகனை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அவன் வருந்தினால் என்ன செய்வது? அவனுக்கு மகன்மேல் உள்ள அன்பு காரணமாக அவனாக முடியை மகனுக்குத் தர விரும்பலாம். ஆனால், அதைப் பிறர் செய்யத் துணிந்தால் அது அவனால் ஏற்றக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று கூறல் இயலாது. இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தன்னுடன் இருந்து வாழ்ந்து தன் உப்பைத் தின்று உடலை வளர்த்த இந்த அமைச்சர்கள் சந்தருப்பம் வந்தவுடன் அரசாட்சி மாற்றத்தை விரும்புகிறார்களே என்று கிழ அரசன் நினைத்துவிட்டால் யாது செய்யலாம்? மனித இனம் வியத்தகு தன்மைகள் நிறைந்தது. எனவே, கிழவன் இவ்வாறு நினைந்து அமைச்சர் மேல் வெறுப்புக் கொள்ளவும் கூடுமன்றோ? நுண்ணறிவு மிக்க தான் கூறும் சொற்கள் இவ்வாறு ஓர் எண்ணத்தை மன்னன் மனத்தில் தோற்றி வைக்கவும் கூடும் என்பது அமைச்சனுக்குத் தெரியாதா? சரி! இதனை விடுத்து மன்னன் சொல்லிய கருத்தை அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/59&oldid=770796" இலிருந்து மீள்விக்கப்பட்டது