பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காலமும் சூழ்நிலையும்

ங்க காலம் என்பது கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் முடிந்தது. அவ்வளவில் மூவேந்தர் ஆட்சியும் மறைந்தது.

தொண்டை நாட்டிலே பல்லவர் ஆட்சி தோன்றியது. பல்லவ அரசின் தலை நகரம் காஞ்சி ஆயிற்று, பாண்டிய நாட்டிலே களப்பிரர் ஆட்சி தோன்றியது.

பின்னே சோழ நாடும் களப்பிரர் வசம் ஆயிற்று, களப்பிரர் ஆட்சி கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை நிலவியது.

களப்பிரர் சமண மதத்தையும், பெளத்த மதத்தையும் ஆதரித்தனர். கி.பி. 470ல் வச்சிர நந்தி என்பவர் மதுரையிலே தமிழ்ச் சங்கம் அமைத்தார். சமண அறிஞர் பலர் தமிழ் இலக்கியங்கள் வாயிலாகத் தங்கள் மதக் கருத்துகளைப் பிரசாரம் செய்யத் தொடங்கினர். சீவக சிந்தாமணி எனும் சிறப்புமிக்க தமிழ்க் காவியம் தோன்றிய காலம் இதுவே. இந்தக் காவியத்தை இயற்றியவர் திருத்தக்க தேவர் ஆவார். சமணக் கொள்கைகளைப் பிரசாரம் செய்வதே சீவக சிந்தாமணியின் நோக்கம் ஆகும்.

சங்க காலத்திலே தமிழ் நாட்டில் பெளத்த மதம் பரவியிருந்தது. சமண மதமும் பரவியிருந்தது. ஆனால் ஒருவரை ஒருவர் தாக்குதல் இல்லை. பெளத்த சமணப் போராட்டம் இல்லை. பின்னே களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பெளத்தமும் சமணமும் தம்முன் பிணங்கின. பெளத்த சமணப் போராட்டம் தலைதூக்கியது.

குண்டலகேசி ஆகிய இரு நூல்களும் இதற்கு சான்று பகரும். குண்டலகேசி பெளத்தக் கருத்துக்களைக் கூறும். நீலகேசியோ சமணக் கருத்துக்களைக் கூறும். இப்பிரசாரப் போக்கில் ஒருவரை மற்றொருவர் தாக்குவர்.

3