பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

அரசன் முதலாம் குலோத்துங்கன் அவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டான். இராமாநுசர் சோழனிடம் போகவில்லை. அவருக்குப் பதிலாகக் கூரம் சென்றார். “சிவனைவிட மேலானது இல்லை” “சிவாத் பரதரம் நாஸ்தி” என்று ஓர் ஓலையில் எழுதிக் கையெழுத்திடுமாறு பணித்தான் சோழன்.

சிவம் என்ற சமஸ்கிருதச் சொல் இரு பொருள் கொண்டது. சிவன் என்பது ஒரு பொருள்; நாலு படி கொண்ட குறுணி எனும் அளவைக் குறிப்பது மற்றொரு பொருள்.

“த்ரோணம் அஸ்தி தத: பரம்” என்று எழுதினார் கூரம். த்ரோணம் என்றால் பதக்கு. அதாவது குறுணிக்கு மேற்பட்டது பதக்கு. இந்தப் பொருள் தொனிக்க எழுதினார் கூரம். இது கண்டு சீறினான் சோழன். கூரத்தின் கண்கள் இரண்டையும் பிடுங்கிவிடும்படி கட்டளையிட்டான். இராமாநுசர் வரவில்லை; கூரமே வந்தார் என்று அறிந்த அரசன் மீண்டும் அவரை அழைத்து வருமாறு ஆட்களை ஏவினான். அதற்குள் இராமாநுசர் சோழநாடு விட்டு ஓய்சால நாட்டுக்குப் போய்விட்டார். இது நடந்தது 1104 ம் ஆண்டில் அப்போது இராமாநுசருக்கு வயது எண்பத்தேழு.

இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் பெரிய புராணத்தை இயற்றினார் சேக்கிழார். இரண்டாம் குலோத்துங்கன் காலம் எது? கி.பி 1133 முதல் 1150 வரை ஆகும்.

பன்னிரண்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்த கச்சியப்ப சிவாகாரியார் கந்த புராணத்தை இயற்றினார். புராணம் என்று அழைக்கப்பட்டாலும் இதுவும் ஒரு காவியமே. விருத்தப்பாவினால் ஆகிய சிறந்த காவியம்.