பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28



உன்னுடைய மந்திரிகள் எப்படி இருக்க வேண்டும்? சத்திய சீலர்களாக இருக்க வேண்டும்; வாய்மையுடையவராக இருத்தல் வேண்டும். அது மட்டும் போதுமா? போதாது. நல்ல அறிவில் முதிர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

உன்னுடைய படைத் தலைவர்கள் எத்தகையோராயிருத்தல் வேண்டும்? போர்த் தொழில் வல்லவராக இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் போதுமா? போதாது. நல்ல பயில்வான்; மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றிலே வல்லவன். அந்த கர்வத்தினாலே நாட்டு மக்களுக்குத் தீங்கு செய்து கொண்டிருப்பான். உன்னுடைய படைத்தலைவர்கள் அத்தகையோராயிருத்தல் ஆகாது. போர்த் தொழிலில் வல்லவராக இருத்தல் வேண்டும். அதே சமயத்தில் எவர்க்கும் தீமை செய்யாத நல் ஒழுக்கம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு பறவைக்கு எப்படி இரு சிறகுகள் உள்ளனவோ அப்படியே ஓர் அரசுக்கும் இரு சிறகுகள் உண்டு. ஒன்று மந்திரிசபை; இன்னொன்று படைத் தலைமை. இந்த இரு சிறகுகளோடும் நீ நெருங்கிய நல்லுறவு கொண்டு இயங்க வேண்டும்.

காட்சிக்கு எளியனாய் இரு. நீ உன் சபா மண்டபத்திலே உள்ளே இருப்பாய், குடிமக்கள் உன்னைக் காண வருவார்கள். உனக்கு முன்னே உள்ள பரிவாரங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தித் திருப்பி விடுவார்கள். அதனாலே குடி மக்களுக்கு உன்மீது கசப்பு ஏற்படும். அத்தகைய கசப்புக்கு இடம் கொடாதே. உன்னைக் காணவருவோர் அதிக சிரமம் இல்லாமல் எளிதில் உன்னைக் காணும் வகையில் இரு. அதே சமயத்தில் அவர்கள் உன்னைச் சுலபமாக எண்ணி விடக்கூடாது. உன்னுடன் நெருங்கிப் பழகி எது வேண்டும் ஆயினும் பேசலாம் என்று நினைக்கக்கூடாது. ஆகவே