பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆதி காவியம்

ராமாயணம் என்ற காவியம் ஆதியிலே வால்மீகி முனிவரால் சம்ஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டது; இருபத்து நாலாயிரம் சுலோகங்கள் கொண்டது; ஆதி காவியம் என்ற பெருமை பெற்றது.

இராமர் அசுவமேத யாகம் செய்தபோது அந்த மகா மண்டபத்திலே லவன்-குசன் ஆகிய இருவராலும் பாடப் பெற்றது; உண்மைக்கு மாறுபடாத ஒன்று — நடந்ததை நடந்தவாறு கூறுவது - என்று எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

வால்மீகி முனிவரது காவியத்தினின்றும் உணர்ச்சி பெற்ற கவிஞர் பலர்.

மகாகவி காளிதாசன் ரகு வம்சம் என்ற சாகாவரம் பெற்ற காவியத்தை இயற்றினான்.

சம்பு எனும் கவியோடு உரை நடை தழுவிய நூலை அளித்தான் போஜன்.

இவை சம்ஸ்கிருத மொழியை வளம் பெறச் செய்தன.

இவற்றின் விளைவாக நமது நாட்டு மொழிகள் பலவற்றிலும் இராமாயணங்கள் தோன்றலாயின. அம்மட்டோ? இல்லை; இல்லை.

பெளத்தர்களும் சமணர்களும் தங்களுக்கு ஏற்ற முறையில் இராம காதையைத் தழுவிக் கொண்டார்கள். அந்த வகையில் தோன்றிய ராமாயணங்கள் பல; பலப்பல.