பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

பூத்து – தாமரை மலர்கள் அடர்ந்த காடு என்று சொல்லும்படியாக மலர்ந்து; வந்து இழிந்தன – பூமியிலே வந்து இறங்கியது என்று சொல்லும் படியான;கோலத்தான் தனை– அழகிய திருமேனியுடைய இராமபிரானை; மனம் எனக்களிக்கும் கண்ணினான் – மனம் போல மகிழும் கண்களையுடையவனாய்; கண்டனன் – பார்த்தான்.

இராமனைக் கண்ட உடனே இளைய பெருமாள் அவ்விராமனின் திருவடிகளைத் தொழுது நின்றான்.

சீதையைத் தனியே விட்டு வர நேர்ந்த காரணங்களை எல்லாம் லட்சுமணன் விவரித்தான். கேட்டான் இராமன்.

பொன்மானைப் பிடித்துத் தருமாறு கேட்ட சீதையின் மீது எவ்வித குற்றமும் இல்லை. “அது பொன் மான் அன்று; மாயமான்” என்று கூறிய உன் மீதும் குற்றம் இல்லை. குற்றம் எனதே. மானைத் தொடர்ந்து வந்த குற்றம் எனதே.

சீதைக்கு ஆபத்து விளைவிக்கக் கருதிய யாரோ செய்த சூழ்ச்சி இது என்று கூறி மனம் உடைந்து சிந்தை தளர்ந்தான் இராமன். தம்பியுடன் விரைந்தான் பன்னசாலைக்கு.

ஓடி வந்தனன் சாலையின்
       சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ்சுரி குழலாள்
       தனைக் காணான்
கூடு தன்னுடையது
       பிரிந்தாருயிர் குறியா
தேடி வந்து அது
       கண்டிலது ஆம் என நின்றான்.