பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அயோத்தியா காண்டம்


கோசல நாட்டின் தலைநகர் அயோத்தி. அந்த அயோத்தி மாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை விவரிக்கும் காண்டம் ஆதலின் இஃது அயோத்தியா காண்டம் எனும் பெயர் பெற்றது.

இந்தக் காண்டம் 12 படலங்கள் கொண்டது. இந்த பன்னிரண்டு படலங்களிலுமாக மொத்தம் 1343 பாடல்கள் உள்ளன. அவற்றுள் 56 பாடல்களைத் திரட்டி இப்பதிப்பில் வெளியிட்டிருக்கிறோம்.


பெருமகன் என்வயின் பிறக்கச் சீதையாம்
திருமகள் மணவினை தெரிய கண்ட நான்
அருமகன் நிறை குணத்து அவனி மாது எனும்
ஒருமகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன்.

இராமனாகிய திருமகன் என் வயிற்றில் பிறந்தான். அதனால் சீதையாகிய திருமகளின் திருமணம் கண்டேன். அரிய அம்மகன் நிறைந்த குணமுடைய பூமி தேவி என்கிற ஒரு மகளை மணக்கும் முடிசூட்டு விழாவையும் கண்டு மகிழ விரும்புகிறேன் என்று கூறினான் தசரத மன்னன்.