பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

உண்டு. யான் பொன்றும் பொழுதே - நான் உயிர் விட்டபோதே; புகழ் பூணும் - எனக்குப் புகழ் உண்டாகும்; எனா - என்று.

***


“ஆதலால் இறத்தலே
        அறத்தின் ஆறு” எனாச்
சாதல் காப்பவரும் என்
        தவத்தில் சாம்பினார்
ஈது அலாது இடமும்
        வேறு இல்லை என்று ஒரு
போது உலாம் மாதவிப்
        பொதும்பர் எய்தினாள்.

ஆகவே உயிர் விடுவதே நல்லது. அதுவே அறமும் ஆகும். இங்கே எனக்குக் காவல் செய்யும் அரக்கியரும் தூங்குகின்றனர். நல்ல காலம். தடுப்பார் எவரும் இலர். இதுவே சமயம்.

இவ்வாறு எண்ணி அங்கே உள்ள குருக்கத்தி மரப்புதரை அடைந்தாள்.

***


ஆதலால் - ஆதலால்; இறத்தலே - சாதலே; அறத்தின் ஆறு - தருமத்தின் முறையாகும்; எனா - என்று எண்ணி; சாதல் காப்பவரும் - சாதலினின்று என்னைக் காப்பவரும் (அரக்கியரும்) என் தவத்தில் - நான் செய்த நல்வினைப் பயனாய்; சாம்பினார் - இப்போது உறங்கி கிடக்கின்றார்; ஈது அவரது - இந்த சமயம் அல்லாது; (உயிர் துறக்கத் தக்க சமயம்) வேறு இடமும் இல்லை - வேறு சமயமும் இல்லை; என்று - என்று நினைத்து; போது உலாம் - மலர்கள் அசையப் பெற்ற; ஒரு மாதவிப் பொதும்பர் - ஒரு குருக்கத்தி மரச் செறிவை; எய்தினாள் - அடைந்தாள்.