பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160



இழந்தமணி புற்றரவு
       எதிர்ந்தது எனல் ஆனாள்
பழந்தனம் இழந்தன
       படைத்தவரை ஒத்தாள்
குழந்தையை உயிர்த்த மலடிக்கு
       உவமை கொண்டாள்
ஒழிந்த விழி பெற்ற தொரு
       உயிர்ப் பொறையும் ஒத்தாள்.

நல்ல பாம்பு ஒன்று தன்னுடைய நாக ரத்தினத்தை இழந்துவிட்டது. இழந்த அந்த ரத்தினத்தை மீண்டும் கண்டுகொண்டது. அதன் மகிழ்ச்சி எத்தகையதாயிருக்கும். அம்மாதிரி மகிழ்ந்தாள் சீதை. நீண்ட காலமாக மகப்பேறு இல்லாமல் இருந்தாள் ஒருத்தி. மலடி என்று எல்லாரும் சொன்னார்கள். திடீரென்று அவளுக்கு மகப்பேறு உண்டாயிற்று. அவள் எப்படி மகிழ்வாள்? அப்படி மகிழ்ந்தாள் சீதை. பெரும் செல்வத்தை இழந்துவிட்டான் ஒருவன். அச் செல்வம் மீண்டும் அவனுக்குக் கிடைத்துவிட்டது. கண்பார்வை இழந்துவிட்டான் ஒருவன். மீண்டும் அவனுக்கு பார்வை வந்துவிட்டது. இவர்களைப்போலவே மகிழ்ந்தாள் சீதை.

புற்று அரவு - புற்றில் வாழும் பாம்பு; இழந்த மணி - இழந்த தன் மணியாகிய நாகரத்தினத்தை; எதிர்ந்தது - நேரே கண்டு கொண்டது; எனல் ஆனாள் - என்று சொல்வதற்கு ஒப்பானாள்; இழந்தன - இழந்தனவாகிய; பழம் தனம் - தமது பழைய செல்வங்களை படைத்தவரை ஒத்தாள் - மீண்டும் பெற்றவர் அடைந்த நிலைக்கு ஒப்பானாள். மலடி - மலடியாக இருந்த ஒருத்தி; குழந்தையை உயிர்த்தற்கு - ஒரு குழந்தையைப் பெற்றதற்கு உவமை கொண்டாள் - உவமையானாள்; ஒழிந்த விழி - பார்வை அற்றுப் போன கண்கள்; பெற்றதோர் உயிர்-