பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178



அங்கதன் தோள் மிசை - அங்கதனுடைய தோள்களின் மீது; இளவல் - இளைய பெருமானாகிய லட்சுமணன்; அம்மலை பொங்கு இளம் கதிர் எனப்பொரிய - அழகிய உதயகிரிமேல் கிளம்பித் தோன்றும் எழு ஞாயிறு ஒப்ப விளங்க; போர் படை - போரில் வல்ல வானரப் படைகள்; இங்கு வந்து இறுக்கும் - இந்த இலங்கையில் வந்து இறங்கித் தங்கும்; நீ இடரின் ஏய்துறும் சங்கையும் - நீ இனித் துன்பமடைவாய் என்ற சந்தேகத்தையும்; நீங்குதி - நீங்கி இருப்பாய்; தனிமை நீங்குவாய் - இராமபிரானை விட்டுத் தனித்திருக்கும் இந்நிலைமையும் நீங்குவாய்.

***

சூடையின் மணி கண்மணி
        ஒப்பது தொல் நாள்
ஆடையின் கண் இருந்தது
        பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர்
        நல்கினை நல்லோய்
கோடி என்று கொடுத்தனள்
        மெய் புகழ் கொண்டாள்.

"என்னைத் தேடி வந்து எனக்கு உயிரளித்த நல்லவனே! எனது கண்மணி போன்ற சூடாமணியை எனது ஆடையிலே முடிந்து வைத்திருந்தேன். அதைத் தருகிறேன், பெற்றுக் கொள். என்னைக் கண்டதற்கு அடையாளமாக இதை அவனிடம் கொடு" என்று கூறி சூடாமணியை அநுமனிடம் அளித்தாள்.

அநுமனும் வணங்கி அதை வாங்கிக்கொண்டான்.

சூடாமணி என்பது பெண்கள் தலையிலே சூட்டிக் கொள்ளும் ஓர் இரத்தின ஆபரணம், சூரியவமிசத்து அரசர் ஒருவருக்கு வருண பகவான் வெகுமதியாக அளித்தது.