பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

இடம் உண்டோ?; எந்தையை யாயை முன்னை கொன்று வந்தான் என்று உண்டோ - என் தந்தையையும் தாயையும் அண்ணனையும் கொலை புரிந்துவிட்டு வந்து சரணம் புக்கான் என்று கூறித் தள்ளத்தான் இடம் உண்டோ? துன்றி வந்து அன்பு பேணும் துணைவனும் அவனே - நம்மை நெருங்கி வந்தவனாகக் கருதி அன்பு பாராட்டுவதற்குத் தக்க நண்பனும் அவனே; பின்னை - இதன் பின்னை; பொன்றும் என்றாலும் - அவனால் நாம் இறத்தல் கூடும் என்ற போதும்; நம்பால் - அவனைப் புகலாக ஏற்ற நம்மிடத்து; புகழ் அன்றி பிறிது உண்டாமோ - புகழே அல்லாமல்; அதற்கு மாறான பழி நமக்குச் சேருமோ? (பழி அவனையேதான் சாரும்); ஓ எதிர்மறை.

***


ஆதலான், “அபயம்!” என்ற
       பொழுதத்தே, அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது;
       இயம்பினர், என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக்
       கடவது என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்
       வயின் கொணர்தி” என்றான்.

ஆதலால், “விபீடணன் அபயம் என்று சொன்னபோதே அபயதானம் கொடுத்தலே என் கடமையாகும். என்னிடம் வைத்த பேரன்பால் நீங்கள் அவனை ஏற்கலாகாது என்று முன் சொன்னீர்கள். இனி வேறு வகையாக எண்ண வேண்டுவது யாது? சூரியனின் மைந்தனாகிய சுக்ரீவனே! குற்றமற்றவனாகிய விபீடணனை நீயே என்னிடத்து அழைத்து வருவாயாக” என்று கூறினான்.

***