பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

நீ கொடுக்க நான் ஏற்பேனா? (மாட்டேன்) இதற்கு நிகர் - இதற்குச் சமம்; வேறு எண்ணில் - வேறு ஒன்று கூறினால் (அது எது?) சீயம் - சிங்கமானது; நல்லரசு - நல்லாட்சியை; நாய்தரக் கொள்ளும் - நாய்தர ஏற்குமோ? என்று நக்கான் - என்று நகைத்தான்.

***

‘கூவி இன்று என்னை, நீ போய்த்
        தன்குல முழுதும் கொல்லும்
பாவியை அமருக்கு அஞ்சி அரண்
        புக்குப் பதுங்கினானைத்
தேவியை விடுக அன்றேல்
        செருக்களத்து எதிர்த்துத்தன்
ஆவியை விடுக என்றான்
        அருள் இனம் விடுகிலாதான்.’

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இந்தக் கடைசி நிமிடத்திலும் இராமனிடம் சீதையைக் கொடுத்துத் தன்னுயிரை இராவணன் காப்பாற்றிக் கொள்ளலாம். தன் குலத்தையும் அழிவின்றிக் காக்கலாம். “இதை நீ செய்ய விரும்பாவிடில், போர்தான் முடிவு. அச்சத்தினால் அரணில் பதுங்கியிராமல் உன்னை வெளியே வரச்சொன்னான் அருட்செம்மல் இராமபிரான்” என்று அங்கதன் இராவணனிடம் கூறினான்.

***

அருள் இனம் விடுகிலாதான் - (நீ பெரும் பிழை செய்தும் கூட) இன்னமும் உன்னிடம் இரக்கம் நீங்காத இராமன்; என்னைக் கூவி -என்னை அழைத்து; நீ போய் - நீ சென்று; தன் குல முழுதும் கொல்லும் பாவியை - தன் குலம் முழுவதையும் கொல்கின்ற பாவியாகிய இராவணனை அடைந்து; அமருக்கு அஞ்சி - போருக்குப் பயந்து; அரண் புக்குப் பதுங்கினானை - பாதுகாவலில் பதுங்கியிருக்கும்