பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

347

தனங்களையுடையவளும்; கை வளை - கையில் வளை தரித்தவளுமான சீதை; (அங்கியைப் பார்த்து); தீ செல்வா - அக்கினி தேவனே! (நான்) மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் - மன, மொழிகளால் களங்கம் உற்றவள் எனின்; (என்னை நீ), சினத்தினால் சுடுதி - கோபத்தினால் சுட்டெரிப்பாயாக; என்றாள் - என்று சொல்லி; புனம் துழாய் கணவற்கும் - புனத்திற் செழிக்கும் திருத்துளவம் அணிந்த கணவனான இராமபிரானையும்; வணக்கம் போக்கினாள் - வணக்கம் செய்தாள்.

***

அக்கினியில் இறங்கினாள் சனகனின் மகள். பஞ்சு தீயில் எரிந்தது போன்று, அக்கினியானது அன்னையின் கற்புத் தீயால் வெந்தது. அன்னையோ தாமரை மலரில் செல்வது போல் எவ்வித பாதிப்புமின்றி சென்றாள். அக்கினி தேவன் அன்னையின் கற்பில் வெம்பினான்; தவித்தான்; பிராட்டியை ஏந்திக்கொண்டு, எழுந்தான்! இராமனிடம் ஓலமிட்டான்.

தீக்குளித்த அன்னை எவ்வாறு தோன்றினாள்? அவள் மேனியில் எவ்வித வாட்டமுமின்றி, பொலிவுடன் வெளிப்பட்டாள். இராமனிடம் அக்கினி முறையிடும் போது என்ன கூறினான்? ‘நான் சாதாரண தீ, எல்லாவற்றையும் எரிக்கக் கூடியவன் தான். ஆனால் சீதையின் கற்பு, தெய்வீக ‘தீ’. அந்தத் தீயிக்கு முன் இப்புறத் தீ திறனற்றதாகிவிடும். அதுவுமன்றி, அத் தீ, இத் தீயை பொசுக்கும்.’

(இராமன், ஏன் சீதை தீக்குளிக்க அனுமதித்தான்? பண்டை காலத்தில் எந்நாட்டிலும் இந்த வழக்கு பிரபலமாக இருந்தது. தாம் நெறி தவறாதவர் என்பதை நிரூபிக்க மேற்கொள்ளப்பட்ட இவ் வழக்கத்தின்படியே இராமன் சீதை தீக்குளிக்க ஒப்பினான்.)