பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கம்பன் சுயசரிதம்


அற்புதம்தானே சார்! புதிதாக என்ன அற்புதத்தைக் கண்டீர்கள்” என்றேன் நான். “சார், இங்கே ஒரு ஏடு, கம்பன் எழுதிய சுய சரிதம் என்று இருக்கிறது” என்றார். உடனே ஒரு துள்ளு துள்ளி, “என்ன? கம்பன் எழுதிய சுயசரிதமா! ஆட்டோபயாகிராபியா? என்ன சார் சரடு விடுகிறீர்கள். அப்படி ஒன்றிருந்தால் இதுவரை உங்களுக்குக் கூடத் தெரியாமலா இருந்திருக்கும். அப்படி ஒன்றிருந்தால் - எத்தனை விவாதங்கள், விவகாரங்கள் எல்லாம் என்றோ முடிந்திருக்குமே. இன்றைய ஆராய்ச்சியாளர் பலரின் தலைவலியும் எப்போதோ தீர்ந்திருக்கும். சரி சார், அந்த ஏட்டை எடுங்கள். என்ன வேலை இருந்தாலும் அதை முதலில் படித்துவிட்டுத்தான் மற்ற வேலை. எடுங்கள் சார் - எடுங்கள்” என்று அவசரப்பட்டேன். சாஸ்திரியாரோ போய் அலமாரியைத் திறந்து பல ஏடுகளைப் புரட்டி, கடைசியில் நான்கு ஐந்து ஏடுகளை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். ஏடுகளைப் பெற்ற நான் சௌகரியமாக ஒரு மேஜை முன்பு உட்கார்ந்து ஏடுகளைப் புரட்ட ஆரம்பித்தேன். அந்த ஏடுகளில் ஒன்றிலாவது முகப்பு ஏடு இருக்கவில்லை. ஓரிடத்திலாவது சுயசரிதம் என்ற தலைப்பும் இல்லை. உடனே பக்கத்திலிருந்த சாஸ்திரியாரிடம், “என்ன சார் சுயசரிதம், சரித்திரம் என்றெல்லாம் பிரமாதமாகச் சொன்னீர்கள். ஒன்றையும் காணோமே” என்றேன். “சார், எனக்குத் தெரியும். நீங்கள் அவசரக் குடுக்கை என்று. கொஞ்சம் சாவதானமாக ஏட்டைப் புரட்டுங்கள். இருந்து படியுங்கள். படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். ஏட்டில் முதல் ஏடு முகப்பு ஏடு, இல்லை என்பதனால், ஏட்டைத் திருப்புவதையே விட்டுவிடாதீர்கள். உங்களுக்குத்தான் தெரியுமே, எங்கள் சரஸ்வதி மஹாலில் எத்தனையோ ஏடுகளுக்கு முகப்பு ஏடு இல்லை என்று. வாலும் இல்லாமல் தலையும் இல்லாமல் இருக்கும் ஏடுகள்தான் எத்தனை எத்தனை. அத்தனை ஏடுகளிலும் உள்ளே விஷயத்தைப் படித்துத்தானே இது எந்த ஏடு என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆதலால் ஆர அமர இருந்து ஏட்டைத்