பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

கம்பன் சுயசரிதம்

கங்கை கரைக்கு வந்தபொழுது. ஏதோ அன்பின் மிகுதியால், தராதரம் அறியாமலே ‘தேன்உளது, தேனை உண்டு தேவ்ரும் நுகர்தற்கு ஆம் ஊன் உளது, துணைநாயேம் உயிர் உளது, விளையாடக் கான் உளது, புனலாடக் கங்கையும் உளது. வேறு என்ன வேண்டும். இங்கேயே நீ இருந்துவிடு’ என்று இராமனை மிக்கப் பரிவோடு வேண்டிக் கொள்கிறான். குகனது அன்பினை அறிந்த ராமன் அப்படியே கனிந்து உருகி விடுகிறான். தன்னுடன் சக்கரவர்த்தியின் மக்களாகப் பிறந்தவர் இலக்குவன் பரதன் சத்ருக்கனன் என்ற மூவர் மாத்திரம் அல்ல. இங்கேயும் ஒருவன் இருக்கிறானோ, நான்காவது குமாரனாக என்றே எண்ணுகிறான்.

என்னுயிர் அனையாய் நீ
    இளவல் உன் இளையான்;
நன்னுதல் அவர் நின்கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது, நான் உன்
    தொழில் உரிமையில் உள்ளேன்

என்றே கூறி அவனை மகிழ்வககறான். தானுமே சந்தோஷமுறுகிறான். இந்த சீலம் வளர்க்கும் சகோதரத்துவம் இன்னும் விரிந்து கொண்டே போகிறது. கிஷ்கிந்தையில் ஒரு வானர வீரன் சுக்ரீவன் அடுத்த தம்பியாகிறான். இலங்கை அரக்கர் கோனின் தம்பி விபீஷணனையும் ஆறாவது சகோதரனாகவே ஏற்றுக் கொள்கிறான்.

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு,
    பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்,
    எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
    நின்னொடும் எழுவர் ஆனேம்
புகல் அரும் கானம் தந்து
    புதல்வரால் பொலிந்தான் நுந்தை