பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

229



உரிய சிந்தனையும், சிங்கம் போன்ற சீற்றமும், அஞ்சாமையும் உள்ளமையால் செல்லத் தக்கவன் அனுமனே” என்று சாம்பவான் கூறினான்.

இவ்வாறு சாம்பவான் புகழ்ந்து கூறி முடித்ததும் அறிவிற் சிறந்த அனுமன் சம்மதித்தான்; உறுதியான நெஞ்சோடு தன் உள்ளக் கருத்தை உரைத்தான்.

“இலங்கையைத் தோண்டி எடுத்து வேரோடு இவ்விடம் கொண்டு வருக என்றாலும், அரக்கரை அழித்து அணங்கனைய சீதையைக் கொண்டு வருக என்றாலும் செய்து முடிப்பேன்; கலங்க வேண்டா; இது உறுதி” என்று கூறினான்.

“கடலை மிக எளிதில் கடப்பேன்” என்று சொல்லி அனுமன் பேருருவில் நின்றான். திருமாலின் திருவடி உலகளக்கத் தாவியது போல, அநுமன் கடலைக் கடக்கத்தானேயாகி நின்றான்; மகேந்திரமலை மேல் நின்ற அனுமன், கூர்மமாகிய ஆமைமேல் நின்றமந்திரமலை போல் காட்சி அளித்தான்.

அனுமன் விண்ணளாவ நின்றான்; மின்னலை உடைய மேகங்கள் அவன் காலில் படிந்து, அவன் காலுக்குக் கட்டிய வீரக் கழல்களைப் போல ஒளி செய்தன. அவன் ஏறி நின்ற மகேந்திரமலை அண்டங்களைத் தாங்கும் பொன்மயமான துணின் அடியில் இட்ட கல்லைப் போலக் காணப்பட்டது.