பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கம்பராமாயணம்



தட்டில் இருந்த அமுதத்தைக் கட்டிய மனைவியர் மூவர்க்கும் பகிர்ந்து அளித்தான். தசரதன் எஞ்சியிருந்த மிச்சத்தை மீண்டும் இளையவள் சுமித்திரைக்குத் தந்து, அவளை இரட்டையர்க்குத் தாயாக்கினான். இலக்குவன் சத்துருக்கனன் சுமித்திரைக்குப் பிறந்தனர். கோசலைக்குக் கரிய செம்மலாகிய இராமனும், கைகேயிக்கு அரிய பண்பினன் ஆகிய பரதனும் பிறந்தனர். தசரதன் வாழ்வு மலர்ந்தது. எல்லாச் செல்வமும் அவனை வந்து அடைந்து மகிழவைத்தன. மக்கட் செல்வம் அவனை மிக்கோன் ஆக்கியது.


கல்வியும் பயிற்சியும்

கட்டிளங்காளையர் நால்வரும் கலை பயில் தெளிவும், மலை நிகர்த்த ஆற்றலும், போர்ப் பயிற்சியும் பெற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தனர். வசிட்டர் அவர்களுக்கு வேத சாத்திரங்களைப் பயிற்றுவித்தார். நூலறிவும் போர்ப் பயிற்சியும் மிக்கவர்களாய் வளர்ந்தனர். நாட்டாட்சி முறை கற்க, அவர்கள் மக்களோடு பழகினர்; அவர்கள் குறைகளை நேரில் கேட்டு அறிந்தனர்.

மாலை வேளைகளில் சாலை நிலைகளில் ஊர்ப் புறம் சென்று மக்களைச் சந்தித்தனர். உதய சூரியன் உதித்ததுபோல அவர்கள் அவனை மதித்துப் போற்றினர். செல்லும் இடம் எல்லாம் வெல்லும் திறனுடைய இளவல் இலக்குவன், இராமனைத் தொடர்ந்தான். அவ்வாறே பரதனைச் சத்துருக்கனன் நிழல்போல் தொடர்ந்தான். “தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான்” என்று கூறும்படி இலக்குவன் இராமனுக்கு அரணாக விளங்கினான். “உடன்