பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியப் பார்வை

27


பதிப்புக்கள் வந்து கொண்டிருத்தல் ஆகாது. நெட்டையோ குட்டையோ ஒரு மூலப்பதிப்பே நாட்டிடைப் பரவுதல் வேண்டும். இதனை எப்படிச் செய்வது? யார் செய்வது? இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியன் ஒருவன் இராமாயணத்துக்கும் தோன்ற வேண்டும். தான் நினைக்கும் பாடத்தை மூலமாகக் கொண்டு உரை எழுதிவிடவேண்டும்.

இனி இராமாயணத்துக்கு எவ்வளவு பெரியவர் உரை எழுதினாலும், சில பாடல்களுக்கு நல்ல பாடபேதங்கள் இருத்தலின் அவற்றைத் தள்ளித் துண்ணிவாக ஒன்றை மாத்திரம் கொள்ளுதல் இயலாது. மூலத்தில் ஒரு பாடம் மரபாகக் கொண்டாலும், இதுவும் பொருந்திய பாடம், இதுவும் பொருந்திய பாடம் என்று நூற்றுக்கணக்கான பாடல்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டிய நிலை இராமாயண உரையாசிரியனுக்கு வரும். பாட பேதங்களின் குவியல்களைக் காட்டிக் கொண்டிராமல், துணிந்து பலவற்றைக் கழிக்கவேண்டி வரும். இராமாயண மூலச் செம்மை பதிப்பாசிரியனையோ, பதிப்பையோ பொறுத்ததன்று; உரையாசிரியனை, அவன் உரையைப் பொறுத்தது என்று நினைவிற் கொள்ளுங்கள். எவன் தோன்றி இராமாயண் முழுமைக்கும் ஒரு மூலம் காட்டி வழவழ உரை வரையாமல் இலக்கிய நல்லுரை காண்கின்றானோ, அவன் இராமாயணத்துக்கே தொண்டு செய்தவன் ஆவான். இன்னுங்கூடச் சொல்ல நினைக்கிறேன். இராமாயணத் தற்காப்புக்காகச் சொல்லுகின்றேன். இதுதான் இராமாயண மூலப்பதிப்பு, வேறு பதிப்பு வெளியிடக்கூடாது என்று அரசே பதிப்பு முத்திரையிட்டு விதி செய்தாலும் வரவேற்பேன். எப்படியும் இராமாயணத்துக்கு மூலநோயைக் குணப்படுத்தி ஆகவேண்டும்.

முழுப்பார்வையின் ஒரு பயன்

ஒரு செய்யுளில் எது நல்ல பாடம் என்று தேர்ந்தெடுப்பதற்குக் கூட முழுப்பார்வை வேண்டும். அவ்வொரு செய்யுள் அளவில் நின்று பாடமுடிவு காண்பது குறையாகும். பல பாடல்களில் ஓடிக்கிடக்கும் புலவனது கருத் தோட்டத்தைக் காண்பது பாடத்தெளிவுக்கு நல்லது. இராமாயணம் அறிந்தார் எல்லாம் தெரிந்திருக்கக் கூடிய ஒரு பாட்டைப் பார்ப்போம்.

ஆழிசூழ் உலக மெல்லாம்
பரதனே யாள நீபோய்த்
தாழிருஞ் சடைகள் தாங்கித்
தாங்கருந் தவமேற் கொண்டு
பூழிவெங் கான நண்ணிப்
புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண் டாண்டின் வாவென்
றியம்பினன் அரசன் என்றாள்.