பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

வைக்கிற வழக்கம் தமிழ் நாட்டில் அதிகமாதலால் குடி அழியாதிருக்கிற வரையில் ஒவ்வொரு தலைமுறையிலும் புதுவை அதிபதிகளின் குலத்தில் ஒரு சங்கரனும் ஒரு சடையனும் இருந்தே தீருவார்கள் என்று நம்ப நிரம்ப இடமுண்டு. அப்படியே ஒட்டக்கூத்தன் பாடிய விக்கிரம சோழன் உலாவில்,

............................................மோட்டு அரணக்
கொங்கைக் குலைத்துக் குடகக்குவடு ஒடித்த
கொங்கைக் களிற்றுத் திரிகர்த்தனும், .......................................மட்டை எழக்
காதித் திரு நாடர் கட்டு அரணம் கட்டு அழித்த
சேதித் திரு நாடர் செல்வனும்,

விக்கிரமனோடு இருந்ததாகப் பாடியிருப்பதில், திரிகர்த்தன், சேதி என்கிற பெயர்கள் முறையே கம்பனுடைய ரக்ஷகனான சடையப்பனையும், கம்பன் ஏரெழுபது அரங்கேற்றிய காலத்தில் உடனிருந்த சேதிராயனையும் தான் குறிக்கின்றன என்று சொல்லப் படுகிறது.*[1] ஆனால் திரிகர்த்தன் என்னும் பட்டப் பெயர் கம்பனுடைய நண்பனுக்குத்தான் முதலில் கொடுக்கப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், அவன் வழி முறையில் வந்தவர்களுக்கெல்லாம் அந்தப் பெயர் கொடுக்கப்பட்டு வந்திருக்கவேண்டும் என்று சொல்லுவதல். விகற்பம் ஒன்றுமில்லை. சேதிராயன் என்பதும் ஒரு மனிதனுக்கு இயற்பெயரல்ல, ஒரு குடியின் தலைவர்களுக்குப் பரம்பரையாக வரும் பொதுப் பெயரேயாகும். Ş[2] ஆகையால் கூத்தன் உலாவில்


  1. "செந்தமிழ்", தொகுதி, பக்கம். —
  2. Ş சேதி நில் நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி, மாது ஒரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான் என்னும், 'மெய்ப்பொருள் நாயனார்' புராணத்திலுள்ள, செய்யுள் இங்கே கவனிக்கத் தக்கது. (ஸ்ரீமான் து. அ) கோபிநாத ராயர் "செந்தமி"ழில் எடுத்துக் காட்டியது. புதுவைச் சேதிராயனும் வெண்ணெயூர்ச் சடையனும் ஒரே மனிதன் தான் என்று, மூவலூர்ச் சிவன் கோவிற்சுவர்களில் ஒன்றில் வெட்டி யிருக்கும்.

    தே மா வயங்கு செய்யா...ம பாற்கடல் சேதியர் கோன்
    மாமால் புதுவைச் சடையன்...

    என்னும் வரிகளும் வேறு பிறவும் காட்டுகின்றன என்று பி. அ. நாராயணசாமி ஐயர், "செந்தமிழ்" —இல் சொல்லுகிறார். பழைய சாத்திரங்தனில் இருக்கும் மயக்கங்களைக் களைந்து உண்மையைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமான காரியமாக இருக்கிறது!