உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

என்று ஏற்படும். தவிர, கம்பன் காலத்தில் கம்பன் என்னும் பெயர் புதிதாயிருந்தது பற்றி அந்தப் பெயர் அவனுக்கு வந்ததற்கு நானாவிதமான காரணங்கள் சொல்லிவந்தார்கள். ஆனால் சகம் 934இல் கம்பன் என்ற பெயருள்ள அதிகாரி ஒருவன் திருக்கோவலூருக்கு மேற்கேயுள்ள கீழூரில் வீரட்டானேசுவரர் கோவிலில் பொன் பூக்களும், ஒரு மணிப்பட்டமும், ஒரு வெள்ளிப் பீடமும் சமர்ப்பித்தான் என்று அக்கோவில் கர்ப்பக்கிரகத்திலுள்ள கல்வெட்டினின்று ஏற்படுகிறது. இந்தக் கல்வெட்டில் நம் வாதத்திற்கு வேண்டிய பாகம் பின்வரும் வெண்பா:

வேலியர்கோன், வீதிவிடங்கன், விறல் கம்பன்,
ஆலியலமான், சோழன் அதிகாரி - கோலப்
படியின்மேல் பொன் பூப் பைங்கோவல் வீரட்டர்
முடியின் மேல் வைத்தான் முயன்று.*[1]

இதிலிருந்து கம்பன் என்னும் பெயர் சகம் 934இல் சகஜமான பெயராக இருந்தது என்று ஏற்படுகின்றது. நமது கம்பன் 12ஆவது நூற்றாண்டில் விளங்கினவனாக இருந்தால் அவன் காலத்தில் அந்தப் பெயரை அதுவரையில் மனிதருக்கு வைத்து வழக்கமில்லாத பெயராக நினைத்து அந்தப் பெயர் வந்ததற்குக் காரணங்கள் தேடியிருக்க மாட்டார்கள், என்பது அநேகமாய் நிச்சயம்.Š[2]


  1. "செந்தமிழ்" 4, 295.
  2. "செந்தமிழ்" 2. 99 இல் ஸ்ரீ. ரா. ராகவையங்கார் கூறியுள்ள பிள்வரும் வார்த்தைகளும் இங்கே கவனிக்க தக்கன :- "அன்றியும் முற்காலத்து நூல்களையே எடுத்தாண்ட 'பறத் திரட்டு' என்னும் நூலில், கம்பராமாயணச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டிருத்தலும், கி. பி. 11ஆம் நூற்றாண்டிலிருந்தவரும், 'வீரசோழிய' உரையாசிரியரும் ஆகிய "பெருந்தேவனார், 'கம்பனாரிடைப் பெருமையுளது' எனவும், நச்சினார்க்கினியர் 'கம்பன்' எனவும், உதாரணங்கள் காட்டியமையும் கம்பர்க்குள்ள பழமையைக் குறிப்பிக்கின்றன.

5