பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

போரில் மிகவும் விருப்பமுள்ளவராதலால் கம்பனுடைய யுத்த காண்டம் பால காண்டத்தில் மூன்று கொண்டதாயிருக்கிறது. அயோத்தியா காண்டம் மாத்திரம் வால்மீகியில் பாதிதான் இருக்கிறது.

வால்மீகியை இவ்வளவு நெருக்கமாகத் தொடர்ந்து செல்பவன் தன் காவியத்தின் பெரும் பாகத்தை ஸம்ஸ்கிருத சுலோகங்களின் மொழிபெயர்ப்பாகத்தான் செய்திருக்கிறானோ என்றால் அவ்விதம் இல்லவேயில்லை. கதை சொல்லும் ரீதியும், வாக்கின் நடையும், வர்ணனைகளும், அலங்காரங்களும், மனித உள்ளத்தின் உணர்ச்சிகளையும் இயக்கங்களையும் எடுத்துச் சொல்லும் மாதிரியும், எல்லாம் கம்பனுடையதே, தினம் வால்மீகி ராமாயணத்தில் ஆறு சருக்கங்களும், கம்பனில் நூறு செய்யுள்களுமாக நான்கு மாத காலம் இரண்டு காவியங்களையும் தொடர்ந்து படித்தும், இந்த நான்கு மாதங்களுக்கு முன்னும் பின்னும் அங்கங்கே அப்போதைக்கப்போது தனித் தனிப் பாகங்களைப் படித்தும், சுமார் பத்து வருஷங்களாகச் சோதித்து வால்மீகியையும் கம்பனையும் தாம் சீர்தூக்கிப் பார்த்து வந்திருப்பதில் கதையை வால்மீகி இடத்தினின்று வாங்கிக் கொண்டுதான் கம்பன் எழுதி யிருக்கிறானானாலும், அவன் ஒரு தனிக்காவியம் செய்திருக்கிறான் என்றுதான் சொல்லவேண்டும், என்கிற தீர்மானத்திற்கு நாம் வந்திருக்கிறோம்.

இவ்விரு கவிகளுக்குள்ளும் எடுத்த எடுப்பில் தெரியக்கூடிய பேதம் என்னவென்றால், கம்பனுக்கு ராமன் சாக்ஷாத் பரம்பொருளாக இருப்பதும், வால்மீகிக்கு அவன் கேவலம் மனிதனாக இருப்பதுமே. வால்மீகியில் மூன்று நான்கு இடங்களில் ராமன் விஷ்ணுவின் அமிசம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பாகங்களை நவீன பண்டிதர்கள் பிரக்ஷிப்தம் —