பக்கம்:கரிகால் வளவன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82


வளர்க்கிறார்கள். அமாவாசை நாளிலும் பெளர்ணமியன்றும் கடலில் பரதவர் மீன் பிடிக்கப் போகாமல் தம்முடைய தெய்வமாகிய வருணனுக்குப் பூசை போடுகிறார்கள். தம் மனைவிமாருடன் சேர்ந்து மீனின் கொம்பை நட்டு அதில் வருணனை எழுந்தருளுவித்து வழிபடுகிறார்கள். கூதாளம் பூமாலையையும் தாழம்பூவையும் சூடிப் பனங்கள்ளை உண்டு விளையாடுகிறாகள். காவிரி கடலோடு கலக்குமிடத்தில் தீவினை போகக் கடலாடிப் பிறகு நல்ல நீரில் குளிக்கிறார்கள்.

பெரிய வீதிகளில் பல மாடங்கள் இருக்கின்றன. வானுலகத்தைப் போன்ற இன்பங்களை உடையவை அவை. அங்குள்ள மகளிர் இரவில் இனிய பாடலைக் கேட்டும், நாடகங்களைக் கண்டும், நிலாவிலே இருந்து மகிழ்ந்தும், கள்ளை அருந்தாமல் உயர்ந்த மதுபானங்களை அருந்தியும், பட்டைக் களைந்துவிட்டு மிக நுட்பமான துகிலை உடுத்தும் தம் கணவருடன் மகிழ்கின்றனர். அப்படியே அவர்கள் தூங்கிப் போகிறார்கள். மாடங்களில் ஏற்றிய விளக்குகள் விடியற்காலத்திலும் சுடர்விட்டு எரிகின்றன. இரவிலே மீன் வேட்டைக்காகச் சென்ற பரதவர்கள் அந்த விளக்கை ஒன்று இரண்டு என்று எண்ணுகிறார்கள்.

பரதவர் வாழும் அகன்ற தெருவிலே பண்ட சாலை இருக்கிறது. அங்கே கடுமையான காவலை அமைத்திருக்கிறார்கள். உள் நாட்டிலிருந்து வரும் பண்டங்களை அங்கே குவித்திருக்கிறார்கள். அவற்றிற்கெல்லாம் புலிப்பொறியையிட்டுச் சுங்கம் வாங்கிக் கப்பல்களில் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/88&oldid=1232511" இலிருந்து மீள்விக்கப்பட்டது