பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

"சரி சரி. அதையெல்லாம் இப்போது பேசிப் பெரு மூச்சு விட்டு என்ன பயன்? ஆளைவிடுங்கள்- ஆபீசுக்குப் போகவேண்டும். உங்கள் புளி-பிண்ணாக்கு விலையையும் விளக்கெண்ணெய்-சீயக்காய்ப் பொடி விலையையும் இப்போது கேட்டுக்கொண்டிருக்க நேரமில்லை. நான் வருகிறேன்".

“இந்தாங்கோ-இந்தாங்கோ! அந்தக் காலத்து மய்யக் (மரவள்ளிக்) கிழங்கு விலையையும் மண்ணெண்ணெய் விலையையும் கேட்காமல் போகிறீர்களே! சரி, சாயந்தரமாவது வந்து கேளுங்கோ”

இப்படியாக, உயர்திருவாளர் உலகளந்த பெருமாள் அவர்கள் எங்கேயும் யாரிடமும் பழைய காலத்து விலைவாசிப் பெருமையையே விடாது பிதற்றிக்கொண்டிருப்பது வழக்கம். அது, ஒரு முடிவுக்கு வராமல் தொடர் கதையாய் நீண்டு கொண்டே போகும். அதை இப்போது பேசிப் பேசி என்ன பயன்?

ஒருவாறு திருவாளர் உலகளந்த பெருமாளிள் தொண தொணப்பைத் தொலைத்துக்கட்டி அப்பால் நழுவுவோமேயானால், உயர் திருவாளர் ஒப்பிலாமணியவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம்-இல்லையில்லை-சங்கடம் ஏற்பட்டு விடுகிறது.

ஒரு பெரிய கும்பிடு போட்ட உயர்பெருந்திரு ஒப்பிலா மணியவர்கள் நம் கையிலுள்ள செய்தித்தாளைப் பார்த்து விடுகிறார். ‘பேப்பரிலே என்ன விசேஷங்க?’ என்று ஒரு போடு போடுகிறார். பேப்பரிலா விசேஷம் நடக்கிறது? எங்கெங்கோ ஏதேதோ நடக்கிறது- அதை அதைப் பேப்பரிலே போடுகிறார்கள்-அவ்வளவு தான், எது எப்படியிருந்த போதிலும் ஒப்பிலா மணிக்கு ஒரு செய்தியாயினும் எடுத்துச் சொல்லாவிட்டால் அவர் விட மாட்டார். எதையா-