பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

களில் பாலையை அமைத்தும், பாலைப்பாக்களின் இடையிடையே ஒன்று விட்டு ஒன்றாக மற்ற பாக்களை அமைத்தும் தொகுத்துள்ள முறையின் அழகே அழகு! தமிழர்தம் பாடல் தொகுப்புக் கலையின் உயர் திறனுக்குச் சான்று பகர இஃதொன்றே போதுமே!

மூன்று பிரிவுகள்:

நெடுந் தொகைக் குள்ளேயே வேறொரு கலையழகும் விளங்குகிறது. மாமூலனார் முதல் உலோச்சினார் ஈறாக உள்ள புலவர்கள் நூற்றுநாற்பத்தைவரால் பாடப்பட்டுள்ள இந்நூலின் நானூறு பாடல்களும் மூன்று பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் நூற்றிருபது பாடல்கள் ‘களிற்றி யானை நிரை’ என்னும் பெயரிலும், நூற்றிருபத்தொன்று முதல் முந்நூறு வரையுமான நூற்றெண்பது பாடல்கள் 'மணிமிடை பவளம்’ என்னும் பெயரிலும், இறுதி நூறு பாடல்கள், 'நித்திலக் கோவை’ என்றும் பெயரிலும் தொகுக்கப்பட்டுத் தனித்தனி நூல்கள் போல் காட்சியளிக்கின்றன. இம் மூன்றின் பெயர்க் காரணம் தெளிவு செய்யப்படவில்லை.

ஆண்யானை வரிசையைப் போல எடுப்பான நடையும் மிடுக்கான கருத்தமைப்பும் கொண்ட பாடல்களின் தொகுப்பு களிற்றியானை நிரை என்றும், நீலமணியும் செம்பவளமும் கலந்த மாலை போல நடையாலும் அமைப்பாலும் ஒரு சிறிது வேறுபட்ட பாடல்களின் தொகுப்பு மணி மிடை பவளம் என்றும், ஓரின முத்து மாலையைப் போல தடையாலும் அமைப்பாலும் ஒத்த பாடல்களின் தொகுப்பு நித்திலக் கோவை என்றும் பெயர் வழங்கப்பட்டதாக ஒருவாறு காரணம் கூறலாம்.

பிற நூல்களில் இல்லாத இந்தப் பிரிவு முறை நெடுந் தொகை நானூற்றில் இருப்பது ஒரு கலைச் சிறப்பாகும்.