பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

இலக்கிய வரலாற்றுப் பகுதி

13. பாரதி இலக்கிய வரலாறு

1. முக்கூறுகள்:

பாரதி இலக்கிய வரலாறு என்னும் தொடரில் மூன்று கூறுகள் பொதிந்துள்ளன. அவை:

(1) இலக்கியங்களைப் பற்றி மாகவி சுப்பிரமணிய பாரதியார் கூறியுள்ள வரலாற்றுக் குறிப்புகள்.

(2) பாரதியாரின் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள உலக வரலாற்றுக் குறிப்புகள்.

(3) பாரதியின் இலக்கியமே ஒரு வரலாற்று நூலாகும்.

2. அடிப்படை உண்மைகள்:

பன்னெடுங் காலமாக வரலாற்றை இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே பலர் எண்ணி வந்தனர். வரலாறு ஒரு நீதி இலக்கியம் என்பது அன்னாரது கருத்து. ஏன் இன்றுஞ் சிலர், வரலாற்றை, ஓர் இலக்கியம் போல் கற்பனை கலந்து எழுதுகின்றனர்; இத்தகைய படைப்புகளை வரலாறு அல்லது சரித்திரம் (சரிதம்-சரிதை)என்னும் பெயராலேயே வழங்குகின்றனர். எடுத்துக்காட்டாக, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, புரூரவச் சக்கரவர்த்தி வரலாறு, இராமசரிதம், குமண சரிதம், தமிழ் நாவலர் சரிதை முதலியன காணலாம்.

இன்னுஞ் சிலர், முற்றிலும் கற்பனைக் கதைகளாய் உள்ளனவற்றையும் சரித்திரம் என்னும் பெயரால் வழங்குவர். இதற்கு ஏற்ற காட்டு, வேத நாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் படைப்பாகும்.