பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

ஒன்றாகப் பல பந்தல்கள் போடப்படவேண்டு மென்றும் பந்தலுக்கு ஒரு பாடல் வீதம் பாடி அரங்கேற்றப்பட வேண்டுமென்றும் ஏற்பாடு செய்து கொண்டான் தம்பிப் புலவன். பந்தல்கள் அரண்மனையிலிருந்து சுடுகாடு வரையும் தொடர்ந்து போடப்பட்டிருந்தன. முதல் பந்தலில் முதல் பாடல் பாடப்பெற்றது. இருந்து கேட்டு மகிழ்ந்தான் நந்தி, அடுத்த பந்தலுக்குச் சென்றதும் முதல் பந்தல் எரிந்து விட்டது. இப்படியே எல்லாப் பந்தல்களும் எரிந்து கொண்டு சென்றன. இறுதிப் பந்தலில் ஈமச் சிதையே அதாவது எரி பொருளே அடுக்கி விட்டனர். அதில் படுத்தபடியே இறுதிப் பாடலைக் கேட்டு எரிந்தே போய்விட்டானாம் நந்திவர்மன்.

இப்படியாக நந்திக்கலம்பகம் தோன்றிய வரலாறு நாட்டில் நவிலப்படுகிறது. இவ்வரலாறு உண்மையாயின் தமிழுக்குப் பெருமை தான். எங்ஙனம்? ஒருவனை ஆக்கவும் அழிக்கவும் தமிழ்ப் பாடலுக்கு ஆற்றலுண்டு என்றால் அது தமிழுக்குப் பெருமை தானே! மற்றும், ஒரு பேரரசன், தான் ஆட்சியைத் துறப்பதன்றி, தமிழ்ப் பாடலைக்கேட்டு மகிழ்வதற்காகத் தன் உயிரையும் துறக்கத் துணிந்தான் என்பது உண்மையாயின், அது தமிழுக்கு மிக்க பெருமை யல்லவா? ஆனால் இவ்வாறு நடந்திருக்க முடியுமா?

சான்றுகள்:

இந்த வரலாறு உண்மையென்பதற்குப் பலரால் பல சான்றுகள் பகரப்படுகின்றன. படிக்காசுப் புலவர் தொண்டை மண்டல சதகத்தில், 'கள்ளாருஞ் செஞ்சொற் கலம்பகமே கொண்டு காயம்பட்ட தெள்ளாறை நந்தி’ எனத் தெரிவித்திருப்பதும், சிவஞானமுனிவர் சோமேசர் முதுமொழி வெண்பாவில், 'நந்தி கலம்பகத்தால் மாண்ட