பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

எண்ணியது. ஒரு நிகழ்ச்சி காலப் போக்கில், கண்-மூக்கு வைக்கப் பட்டுப் பெரிய உருவம் பெறுவது இயற்கை தானே! இந்த அடிப்படையில் தான், நந்திக் கலம்பகத்தால் நந்தி மன்னன் மாண்ட கதை நாட்டில் பரவலாயிற்று. கலம்பக அரங்கேற்றத்தின் முடிவில் நந்தி வர்மனும் முடிந்ததால், பின்னர் வேறு எந்தப் புலவரும் எந்த மன்னர் மேலும் கலம்பக நூல் பாடாது விட்டனர் போலும்!

நூல் அமைப்பு:

நந்திக் கலம்பகத்தில் எண்பத்தெட்டுப் பாடல்கள் உள்ளன. கடவுளர் மேல் பாடப்படும் கலம்பகத்தில் நூறு பாடல்களும் மன்னர்மேல் பாடப்படும் கலம்பகத்தில் தொண்ணுறு பாடல்களும் இருக்கவேண்டும் என்பது அந்த நாள் விதி. இந்நூலில் தொண்ணுறுக்கும் இரண்டு பாடல்கள் குறைகின்றன. அவை கிடைக்கவில்லை போலும். நூலின் ஒவ்வொரு பாடலும் ஒன்றோடொன்று அந்தாதித் தொடையாய் அமைந்துள்ளது. நூலுக்குப் பின்னே இருபத்தேழு தனிப்பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடியவர் ஒருவரா அல்லது பலரா என்பதற்குச் சான்றொன்றும் இலது. பலர் பாடிய தனிப் பாடல்களின் தொகுப்பாயிருக்கலாம் இவை.

நந்திக் கலம்பகம், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவகைகளுள் பலவற்றால் பாடப்பட்டுள்ளது. நூலில், தூது, பறை, இரங்கல், கார், புயவகுப்பு, யானைமறம், மடல் குடை மங்கலம், ஊசல், உலா, பூவைநிலை, காலம், சம்பிரதம், மதங்கியார், மறம், தலைவன்-தலைவி-தோழிபாங்கன்-செவிலி ஆகியோர் கூற்றுக்கள் விதலிய பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளன.