பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தெள்ளாறு, வெறியலூர், வெள்ளாறு,கடம்பூர், பழையாறு, தொண்டி முதலிய இடங்களில் பகைவருடன் பொருது வென்றான் பல்லவன் நந்தி. இப்போர்களுள், ஆந்திராவில் துங்கபத்திரைக் கரையிலுள்ள 'குருகோடு' என்னும் குருக் கோட்டையில் வடபுலத்தாரோடு நடத்திய போரும், காஞ்சிக்குத் தெற்கே ஐம்பது கல் தொலைவிலுள்ள தெள்ளாறு, என்னும் இடத்தில் பாண்டியர், சோழர், கங்கர், இராட்டிர கூடர் முதலிய பலரோடு ஒரே நேரத்தில் நடத்திய போரும் மிகவும் குறிப்பிடத் தக்கவை தெள்ளாற்றுப் போர் வெற்றியைப் பற்றி நந்திக் கலம்பகம் பதினாறு பாடல்களில் கூறியுள்ளது. இதனால் இவன் ‘தெள்ளா றெறிந்த நந்தி’, ‘தெள்ளாற்று நந்தி' என்றெல்லாம் அழைக்கப் படுகின்றான். ‘சேர சோழரும் தென்னரும் வடபுலத்தரசரும் திறை தந்த ஈரமாமதக் கரியிவை பரியிவை' என்னும் கலம்பகப் பாடற்பகுதி ஈண்டு கருதத்தக்கது. நந்திக் கலம்பகச் செய்திகள் கல்வெட்டுக் களிலும் பட்டயங்களிலுங் கூடக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கழற் சிங்க நாயனார்:

படைமறம் மிக்கு விளங்கிய நந்திவர்மன் சிவன்பால் ஈடுபாடு கொண்டிருந்தான்.

‘பிறைதவழ் செஞ்சடைப் பிறங்கனாரணன்
அறைகழல் முடித்தவன்'.

‘சிவனை முழுதும் மறவாத சிந்தையான்’

என நந்திக் கலம்பகம் கூறுகிறது. சுந்தரர் தமது திருத் தொண்டத் தொகைத் தேவாரப் பதிகத்தில்,

“கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற் சிங்கன்"