பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

பூவழகிக்கு எழுதிய தபாலில் ‘எஸ்’ என்ற ‘இனிஷியலை’ அதனால்தான் அவன் கிறுக்கிவிடவும் முதலில் துணிந்திருந்தான்.

ஆனால் நடந்தது...?

அவனை மத்தியான்னம் சாப்பாட்டுக்கு அழைத்தார் பெரியவர். அப்போதே அப்பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளவே அவன் துடித்தான். ஆனால் எப்படி அக்கேள்வியை அவரிடம் கேட்பது என்றுதான் அவனுக்குத் தோன்றவில்லை. அதற்கான மனத்தெம்பும் ஒத்துழைக்கவில்லை. இருபத்தைந்து வருஷ காலம், தானே சகலமும் என்று நம்பி, தனக்கெனவே வாழ்ந்து, தன் நிமித்தமே மனைவியை இழந்தும், ‘ஒன்றியாக’த் தியாகப் பண்புடன் வாழ்ந்துவரும் அவரிடம் எப்படி, ‘நீர் என் சொந்தத் தந்தையா, இல்லையா?’ என்று கேட்பது என்ற தயக்கம் அவனை ரம்பமாக அறுத்தது.

ஆனால், செங்கோடன் பேச்சை நூறு சதவிகிதம் புறக்கணிக்கவும் முடியவில்லை ; நூறு சதவிகிதம் நம்பிவிடவும் இல்லை அவன் ; இப்படிப்பட்டதொரு குழப்பத்திற்குத்தான் விதியின் பெயர் சூட்டப்படுகிறதோ ?

அப்பால்..?

சாப்பிட உட்காருமுன் ஒரு காரியம் செய்தான் ஞானபண்டிதன்.

“எஸ். ஞானபண்டிதன்” என்ற தன் பெயர் அச்சடிக்கப் பெற்றிருந்த ‘லெட்டர் ஹெட்’ தாள் ஒன்றை எடுத்து, அதில் ‘எஸ்’ என்ற ‘இனிஷியலை’ அடித்துவிட்டு,அதை உணவு மேஜையில் வைத்திருந்தான்.

சாப்பாட்டுக்கு வந்த சோமசேகர், அவன் கணிப்புப்படியே அத்தாளை எடுத்து உன்னிப்பாகப் பார்த்தார். பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவருடைய விழிகளினின்றும் கடுசரம் உதிர்ந்தது. “என்ன தம்பி, உனக்கு எஸ் — என்கிற இனிஷியல் மேலே என்ன அவ்வளவு ஆத்திரம் ? ... இந்தக் கிழத்தகப்பன் மேலே உனக்குக் கசப்பு விழுந்திடுச்சா ? அன்புக்கும் பாசத்துக்கும் இப்படி ஒரு மாறுதல் உண்டாகும்னு உன் மூலம்தானப்பா நான் தெரிஞ்சுக்கிடுறேன் ! நான் உன் தகப்பன் !... எது எப்படி ஆனாலுல் சரி, ‘எஸ்’ அப்படியேதான்