பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

“ஐயா !” என்று, பெட்டியும் கையுமாக நின்றிருந்த ரிக்ஷாவாலா விளித்தான். ‘அண்ணாச்சியை மறந்துவிட்டானா ?’ ஊஹூம் !

சிவஞானம் திரும்பினான். ரிக்ஷாக்காரன் இன்னமும் பெட்டியைத் தரையில் வைக்காமலே சிந்தனை வசப்பட்டு நிற்பதைக் கண்ணுறறான். “பெட்டியை அப்படியே மேஜை யண்டை சுவரோரமாகப் படுக்கை வசத்தில் வச்சிடப்பா !” என்று நினைவூட்டினான்.

ரிக்ஷாக்காரன் சுயநினைவு தூண்டப் பெற்றவனைப் போல ஒர் அரைக்கணம் தடுமாறி, பின் தெளிந்து, கொடுக்கப்பட்ட குறிப்புக்களுக்கு ஏற்ப, பெட்டியை வைத்தான். எதையோ கேட்டுத் தெளிய வேண்டுமென்னும் ஒரு துடிப்பு அவன் நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

முழுக்கைச் சட்டை ‘ஸ்டாண்டில்’ தொங்கியது. அப்பொழுது, சிவஞானம் மேல்புறம் திரும்பி, ஜன்னல் விளிம்பில் மடித்துச் செருகி வைக்கப்பட்டிருந்த பத்திரிகையை எடுத்துப் பிரித்தான். எடுத்த எடுப்பில், “மாலதி - மாதவன்” என்ற பெயர் காணப்பட்டது. சற்றுமுன் கீழே நின்றிருக்கையில் ஜோடியாக —— ஜோடி காட்டி —— ஜோடி சேர்ந்து சென்ற அவ்விணை அவனது மனத்திரையில் கனவின் நிழலாகச் சென்றது ! நாற்காலியைக் காற்றோட்டமான வட பகுதியில் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான். முண்டா பனியனில் காற்று ஓடியது !

“அண்ணாச்சி !...”

“என்னப்பா?”

சிவஞானம் தலையை உயர்த்திய நேரத்தில், குழந்தை படுத்துக் கிடந்த கட்டிலின் பகுதியிலிருந்து மெல்லிய சத்தமொன்று கேட்டது.

விரைவுடன் அவ்விடத்திற்கு நகர வேண்டியவனான் சிவஞானம். குழந்தை மலம் கழித்துக்கொண்டிருந்தது. இடுப்புக்குப் போட்டிருந்த கிழிசலைக் கால்களின் புறத்தில் பின்னுக்கு இழுத்துவிட்டான். குழந்தையின் முக்கலும் முனகலும் அடங்கின. துணிக்கிழிசலைக் கவனமாக நகர்த்தி இழுத்து மடக்கி மூடி அறையின் ஒரத்தில் வைக்கப்போனான் !