உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

முப்பது நாட்களாக க்ஷவரம் செய்யப்படாமலிருந்த தாடியும் மீசையும் அவனே எப்படி உருமாற்றிவிட்டன !.... களை இழந்து போய்விட்டிருந்த அந்த அழகு முகம் எப்படிக் கறுத்து விட்டது!.... அவனுக்கு நெஞ்சை என்னவோ செய்தது. கண்கள் துயரத்தின் வடிகாலாயின. தன்னையும் குழந்தையையும் மாறி மாறி — மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டான். வெய்துயிர்ப்பு சூடு பறக்க வெளிப்பட்டது. ‘மல்லிகா!’—அவனது உதடுகள் முணுமுணுத்தன. தோல் உரித்திருந்த இதழ்களை மெல்ல பற்களால் கடித்துக்கொண்டான். நாக்கின் நுனி உதடுகளைத் தொட்டுப் படர்ந்தது. மீண்டும் ஆடியில் அவன் உரு ஆடியது; விம்பினான். குழந்தையின் நினைவு அவனுக்குத் தேறுதல் ஆனது. அடக்கிக்கொண்டான். முகத்தை டவலினால் துடைத்துக்கொள்ள முனைந்தான். அப்போது பத்திரிகை அவன் பார்வையில் விழுந்தது.

விழுந்துவிடாமல் தொற்றிக்கொண்டிருந்த செய்தித்தாளை விதானம் காத்து எடுத்தான் சிவஞானம். “மாலதி - மாதவன்”' என்ற பெயரிணை இணையற்ற எழிலாக அவனுக்கு இப்பொழுதும் விளங்கியது. நாற்பது - நாற்பத்தைந்து நிமிஷங்களுக்கு முன்னர் இழே சந்தித்த அந்தப் புதிய ஜோடியை அவன் நெஞ்சில் வாங்கிக்கொள்ளத் தவறவில்லை. இந்தப் பத்திரிகை ஒருவேளை அவர்களுடையதாகத்தான் இருக்குமோ? தானும் மல்லிகாவும் மணமான புதிதில், ஜோடி சேர்ந்து வந்து, இதே மாளிகையில் இதே அறையில் ஒரு நாள் பொழுதைக் கழித்த இன்பப் பொழுதை அவன் மறந்துவிடவில்லை.

தலைப்புச் செய்தியில் சிவஞானம் கண் பதித்தான் ‘அமரர் நேரு மறைவு தினம் — நாடெங்கும் அஞ்சலி!’

நெஞ்சில் ஓடிய வரிகளின் செய்தி அவனைக் கண்கலங்கச் செய்தது. இந்திய நாட்டின் சுதந்திர பாரதத்தின் புதிய சகாப்தமாகத் திகழ்ந்த நேருஜிக்கு அஞ்சலி செலுத்திய தன்னுடைய முன்தின நிலையை அவன் கை தொழுதான். விதி என்ற ஒரு மாயப் பெரும் சக்தி எப்படி எப்படியெல்லாம் விளையாடுகிறது — விளையாட்டுக் காட்டுகிறது...! எழுதிச்