பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

"குழந்தையைக் கேளுங்க, ஐயா !” என்று வேதனையின் தாபம் சுழிக்கச் செப்பினான் சிவஞானம்.

குழந்தையை நோக்கினார் ஈஸ்வரன்.

குழந்தையோ அரைச்சிரிப்புச் சிரித்துவிட்டு உறங்கத் தொடங்கியது.

பிளாஸ்கை எடுத்துத் தரையில் பத்திரமாக வைத்தான் சிவஞானம். அறந்தாங்கியில் காய்ச்சிக் கொண்டுவந்த ஆவின் பால் அவனுக்குக் கை கொடுத்தது; குழந்தைக்குப் பால் கொடுத்தது. 'மல்லிகா ! - உயிரின் துணையாக நின்றவளை அழைத்த போது, ஏனோ அவனது உள்மனம் அவனைச் சுட்டது. குற்றம் புரிந்தவனத்தான் மனம் சுடுமென்பார்கள்! ... பெற்ற தாயிடம் பாலமுதம் சுவைக்கும் நேரத்தில் சூப்பிய விரல்களை எடுத்துவிட்டு, ஆவல்துள்ளப் பாய்ந்து தாய்முலைப்பால் அருந்தும் குழந்தையின் நினைவு அவனுள் ஏடு விரித்தது. கைகால்களை உதறி முட்டிக்கொண்டு அது பாலுண்ணும் காட்சியே தனி! ....

இப்போது...?

அது தாயில்லாப் பிள்ளையாக விதியை மறந்து, தனக்கு நேர்ந்த துயரினை மறந்து தூங்கிக்கொண்டிருந்தது.

"மிஸ்டர்... !! சொல்லுங்க. குழந்தைக்குப் பேசத் தெரியாது. நீங்க சொல்லுங்க. எங்கே உங்க பெண்சாதி ?” என்று பயம் கவ்வக் கேட்கலானார் ஈஸ்வரன்.

"செத்துப்போயிட்டாள்! முப்பது நாள் இன்னையோடு ஆகிவிட்டது! "என்று தேம்பினான் சிவஞானம்

"ஆ !" - ஈஸ்வரனும் தேம்பினார். "அ ட பாவமே ! உங்களையும் ஈஸ்வரன் சோதிச்சிட்டானா ?...” என்று தழு தழுக்கக் கேட்டார்.

அவர் கேள்வியில் தொக்கி நின்ற ஏதோ ஒன்று அவனை. மனம் நெகிழச் செய்துவிட்டது. அப்படியென்றால்.இவரையும்... ?' - 'ஆப்டெக் ட்ராப்ஸ்' சீசாவையும் குளுகோஸ் டப்பாவையும் பாலாடையையும் எடுத்து வைத்தான் சிவஞானம்.

பாலூட்டும் சீசாவையே வெறிக்கப் பார்த்தார் ஈஸ்வரன். "குழந்தையோட சம்ரட்சணையை - சரவரட்சஆணயை நீங்களே கவனிச்சுக்கிடுறீங்களா?" என்று வினவினார் அவர்.